கோவை: உங்களால் முடியாது என்று கூறுபவர்களிடம் இருந்து விலகி இருங்கள் என மாணவர்களுக்கு நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி அறிவுறுத்தினார்.
எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் 25-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா’ என்ற தலைப்பிலான 3 நாட்கள் கருத்தரங்கின் 2-ம் நாள் நிகழ்வு கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள எஸ்எஸ்விஎம் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில், நடிகரும், தன்னம்பிக்கைப் பேச்சாளருமான ஆஷிஷ் வித்யார்த்தி பேசியதாவது:
பல கனவுகளைக் கொண்டதுதான் வாழ்க்கை. அதில், சிலது சிதைக்கப்படலாம். சிதைக்கப்பட்ட கனவுகளுடன்தான் எனது பயணம் தொடங்கியது. வாழ்க்கை என்பது நகர்ந்துகொண்டே இருக்கும். எனவே, கடந்துபோன நிகழ்வுகளைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்த நகர்வை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.
ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ஒன்றைக் கற்றுத்தருகிறது. வாழ்க்கை முழுவதும் மாணவராக இருந்து, நாம் கற்றுக்கொண்டே இருந்தால், நிகழ்காலத்துடன் நாம் ஒத்துப்போயிருப்போம். அதற்கு என்னுடைய வாழ்க்கையையே நான் உதாரணமாகக் கூற முடியும். நான் இந்தி நாடக நடிகராக டெல்லியில் பயணத்தைத் தொடங்கினேன். பின்னர், இந்தி நடிகரானேன். தொடர்ந்து, 11 மொழிகளில் நடிக்கத் தொடங்கினேன். இதுவரை பல்வேறு மொழிகளில் 240-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், இடங்களுக்குச் சென்று உரையாற்றியுள்ளேன்.
கடந்த ஓராண்டுக்கு முன் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிடத் தொடங்கினேன். தற்போது லட்சக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் என்னைப் பின்தொடர்கின்றனர்.
நான் மாணவனாக இருந்து, புதியதைக் கற்றுக் கொண்டதால்தான், இக்காலத்துக்கும் பொருத்தமானவனாக இருக்கிறேன். யாராவது நம்மை ஊக்குவிப்பார்களா என்று நாம் காத்திருக்கக்கூடாது. உங்களை நீங்கள்தான் ஊக்குவிக்க வேண்டும். வாழ்க்கையில் எண்ண முடியாத தோல்விகளையும், வெற்றிகளையும் பெற்றுள்ளேன்.
இவை இரண்டுமே கடந்துபோகும். ஒன்றுமட்டுமே மாறாதது. அது நீங்கள்தான். எனவே, வெற்றி, தோல்வி என எது நிகழ்ந்தாலும், நீங்கள் அதைக் கடந்து சென்றுகொண்டே இருக்க வேண்டும். தோல்விகளை கண்டு முடங்கிவிடக்கூடாது. வெற்றி பெறும்போது ஆணவம் கூடாது.
வாழ்க்கை என்பது தானியங்கி கார்போல இயங்காது. நீங்கள்தான் கியரை மாற்ற வேண்டும். விளையாடினால் தோல்வியோ, வெற்றியோ பெறலாம். ஆனால், அதற்கு முதலில் நீங்கள் விளையாட வேண்டும். மற்றவர்கள் நினைப்பதற்காக நீங்கள் வாழக்கூடாது. உங்களுக்காக வாழுங்கள். உங்களுக்கு நீங்களே ஆச்சரியம் அளியுங்கள். நீங்கள் சாதிக்கமுடியாது என்று நினைத்த காரியங்களை சாதியுங்கள். உங்களைப் போன்று தனித்துவமானவர்கள் உலகில் வேறு யாரும் இல்லை என்பதை உணருங்கள்.
உலகறியாத சிறந்த மனிதர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் உங்களைச் சுற்றி உள்ளவர்களாககூட இருக்கலாம். அவர்கள் பிரபலமானவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. உங்களிடம் உள்ள திறமைகளை, உலகறியச் செய்யுங்கள். உங்களால் முடியாது என்று கூறுபவர்களிடம் இருந்து விலகி இருங்கள். இவ்வாறு ஆஷிஷ் வித்யார்த்தி பேசினார்.
இந்த நிகழ்வில், எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர், நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், அறங்காவலர் மோகன்தாஸ், இயக்குநர்கள் (கல்விபுலம்) ஸ்ரீஷா மோகன்தாஸ், நிதின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.