மனு நீதி என்று பரவலாக அறியப்படும் மனுஸ்மிருதி, இந்து மதம் போன்றவை தமிழ்நாட்டில் அவ்வப்போது விவாதப் பொருள் ஆவது வழக்கம். தற்போது, முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம். பியுமான ஆ. ராசா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், இந்து மதம் குறித்து பேசிய காணொளி சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “நீ பார்சியாக இல்லையெனில், கிறிஸ்தவனாக இல்லையெனில், இஸ்லாமியராக இல்லையெனில், நீ ஒரு இந்துவாகத்தான் இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன்” என்று தொடங்கி மேலும் சில கருத்துகளைக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, ஆ. ராசா பேசிய வீடியோ பதிவை தனது பக்கத்தில் பகிர்ந்து, “தமிழ்நாட்டின் அரசியல் பேச்சின் அவல நிலை. திமுக எம்.பி மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து, மற்ற சமூகத்தினரை திருப்திப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளார்.தமிழகம் தங்களுக்கு சொந்தமானது என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிருஷ்டவசமானது,” என்று பதிவிட்டிருந்தார்.
https://twitter.com/annamalai_k/status/1569334715932614656
இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டில் மத கலவரத்தை தூண்டும் வகையில் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக கருத்துக்களை ஆ.ராசா பரப்பி வருவதாக காவல்துறையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி புகார் அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்துக்களுக்கு எதிராக ஆ. ராசா பேசியதாக கூறப்படும் கருத்துக்கள், சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
இந்த சர்ச்சை குறித்து சென்னையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஏ. எஸ். பன்னீர்செல்வத்திடம் பிபிசி தமிழ் பேசியது.
“ராகுல் காந்தியின் பாத யாத்திரைக்கு கிடைத்து வரும் கவனத்தைத் திசை திருப்ப பாஜக பல விஷயங்களை கையில் எடுக்கிறது. அதில் ஒன்றுதான் ஆ ராசா பேசியதை சர்ச்சையாக்கும் முறை. அவர் ஒன்றும் புதிதாகப் பேசவில்லை. ஏற்கெனவே 150 ஆண்டுகளாக பொது புத்தியில் இருக்கும் விஷயங்களைத்தான் பேசியிருக்கிறார்,” என்கிறார் பன்னீர்செலவம்.
- எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை ஏன்?
- வெள்ளலூர் பேருந்து நிலைய சர்ச்சை: திமுக-அதிமுக இடையே விவாதப் பொருளானது எப்படி?
- இந்திய ஒற்றுமைப் பயணம்: முதல் நாள் சொல்லும் செய்திகள் என்னென்ன?
“திராவிட இயக்கம் இந்துக்களுக்கு எதிரான ஒன்றாக, பெரியார் காலத்தில் இருந்தே பார்க்கப்படுகிறதே” என்று அவரிடம் கேட்டோம். அதற்கு அவர், “பெரியார் மத ரீதியான சொற்றொடரை பயன்படுத்தியது கிடையாது. மதத்தை கடந்த ஓர் அன்பின் அடிப்படையில் உள்ள ஓர் அரசியலை அவர் முன்வைக்கிறார். அதை மத அரசியலுக்குள் சுருக்குவதே அயோக்கியதனம்.
ராசா பேசிய காணொளியில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து கொண்டு சர்ச்சையாக்குவதில் என்ன நியாயம் உள்ளது? அதன் முழு பகுதியையும் வெளியிட வேண்டும்.” என்கிறார் பன்னீர்செல்வம்.
இந்த நிலையில், இந்துக்களுக்கு எதிரான போக்கு என்று கருத்து பரவி வருவதையடுத்து ஆ. ராசா தனது ட்விட்டர் பக்கத்தில், “சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் அவர்கள் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி-வேலைவாய்ப்பு-கோவில் நுழைவில் அவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது? அரசியல் அதிகாரத்தாலும் – பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்?” என்று பதிவிட்டிருந்தார்.
https://twitter.com/dmk_raja/status/1569595971184766976
இது குறித்து ஏ. எஸ். பன்னீர்செல்வம் கூறுகையில், “அவர் ‘சமூக நீதி’க்கான அடித்தளம் பற்றி பேசுகிறார். இந்த சமூக நீதிக்காக எவையெல்லாம் அடிப்படை என்று பார்த்தால், சக மனிதர்களை அடிமைப்படுத்தும் போக்கும் இல்லாமலும், அவமதிக்கும் செயல்களை செய்யாமலும் இருப்பது. இது உலகளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படை சமூக நீதி. இதை எப்படி சர்ச்சைக்குரியதாக மாற்ற முடியும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.
இந்த வகையில், சமூக நீதி என்பது பல ஆண்டுகளாக திராவிட இயக்கம் கையாளும் ஒன்று. இது பெரியார் காலகட்டத்தில் இருந்து மாறுபட்டு கையாள வேண்டிய சூழல் நிலவுகிறதா என்ற கேள்விக்கு, அவர் பதிலளிக்கையில், “சில விஷயங்கள் வெவ்வேறு விதமாக எல்லாம் கையாள முடியாது. உதாரணமாக, சனாதனத்திற்கு எதிராக புத்தர் காலகட்டத்தில் இருந்து போராடி வருகிறோம். ஆனால், அன்றைக்குதான் போராடினோமே என்று இன்று அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட முடியாது. சில விஷயங்கள், அதாவது சமூக நீதியை நிலைநாட்டும் விஷயங்களுக்கு நாம் தொடர்ந்து போராடி கொண்டுத்தான் இருக்கவேண்டும்,” என்றார்.
2020இல் இந்த மனுஸ்மிருதியில் பெண்களைப் பற்றி இழிவாக கூறப்பட்டிருப்பதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஓர் இணைய வழிக் கூட்டத்தில் பேசியிருந்தார். அவரது பேச்சின் ஒரு பகுதியை இந்து வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக ஊடங்கங்களில் அதிகமாகப் பகிர்ந்தனர். திருமாவளவன் பெண்களை அவமதித்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த நடிகை குஷ்புவும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் திருமாவளவனை விமர்சித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனுஸ்மிருதி நூலைத் தடை செய்யவேண்டும் என்று கோரி சென்னையில் சனிக்கிழமை போராட்டம் நடத்தியது. இதற்கிடையில் திருமாவளவனின் பேச்சுக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனு ஸ்மிருதி வரலாறு என்ன?
உண்மையில் இந்த மனுஸ்மிருதி என்பது என்ன? அதன் வரலாறு என்ன?
பண்டைய காலத்தில் சமூக அடுக்குகளை நிர்வகிப்பதற்கான விதிகளை வகுத்தது மனு ஸ்மிருதி என்பதே ஆகும் என்பது பரவலான கருத்து.
‘ஸ்மிருதிகள்’ என்பவை இந்திய வைதீக மரபில், தகுதியில் ‘ஸ்ருதி’ எனப்படும் வேதங்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவை. மனு ஸ்மிருதி தவிர இன்னும் ஏராளமான ஸ்மிருதிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் எழுதியவர் பெயராலேயே அறியப்படுகின்றன.
இவற்றின் உள்ளடக்கம் பற்றிப் பேசும் வரலாற்றுப் பேராசிரியர் அ.கருணானந்தன், வேதங்களில் எல்லாம் இருக்கிறது என்பார்கள். உண்மையில் வேதங்களில் அப்படி ஒன்றும் இல்லை. அவை வெறுமனே போர்கள் செய்வது பற்றியும், வேள்விகள் பற்றியுமே குறிப்பிடுகின்றன. வேதங்களைப் போல அல்லாமல் சந்தேகத்துக்கு இடமற்ற முறையில் செயல்படுத்துவதற்கான சட்டதிட்டங்களே ஸ்மிருதிகள் என்று கூறுகிறார்.
ஸ்மிருதிகளின் தோற்றம், காலம், அவை எதற்காக, யாரால் தோற்றுவிக்கப்பட்டன என்ற கேள்விக்கு விரிவாக விடையளித்தார் பேராசிரியர் கருணானந்தன்.
அவரது பேட்டியில் இருந்து:
‘தொடக்கத்தில் மூன்று வருணம்தான்… ‘
“பிராமணர்கள், ஆரியர்கள் என்ற இரு பதங்களையும் ஒன்று போல பாவித்து குழப்பிக்கொள்கிறார்கள். ஆரியர்கள் என்பது இனத்தைக் குறிக்கும் சொல்.
இந்தியாவுக்குள் ஆரியர்கள் வந்த தொடக்க காலத்தில் இங்கிருந்த மற்ற குடிகளோடு அவர்களுக்குத் தொடர்பு ஏதும் இருக்கவில்லை.
அவர்கள் தங்கள் இனத்துக்குள்ளேயே மூன்று விதமான பகுப்புகளை உருவாக்கிக் கொண்டனர்.
அவர்களுக்கு அவர்கள் இனம்தான் உலகம் என்பதால் ஒட்டுமொத்த இனத்தையும் குறிக்க ‘விஸ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினர். ‘விஸ்’ என்றால் உலகம் என்று பொருள். இந்த விஸ்ஸில் இருந்து சடங்குகளை நடத்துவதற்கான புரோகிதர்களைத் தேர்ந்தெடுத்தனர். இவர்கள் பிராமணர்கள் எனப்பட்டனர். பிறகு படைகளை நடத்துவதற்காக ‘ரஜனியர்கள்’ அல்லது ‘ஷத்திரியர்கள்’ என்பவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
இவர்களைத் தவிர இருந்த மற்ற பொதுமக்களைக் குறிக்க ‘வைஸ்யர்கள்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. விஸ் என்ற சொல்லில் இருந்தே வைஸ்யர்கள் என்ற சொல் பிறக்கிறது. ஆக, வைஸ்யர்கள் என்றால் உலகத்தார் என்று பொருள்” என்றார் கருணானந்தன்.
தொடக்கத்தில் முதல் இரண்டு வருணத்தார் பிறப்பின் அடிப்படையில் முடிவு செய்யப்படவில்லை. அவர்களைத் தேர்வுதான் செய்தார்கள். பிறகு, முதல் இரண்டு வருணங்ளில் இருந்தவர்கள் தங்கள் நிலைகளைத் தக்கவைத்துக்கொள்ள இந்தப் பிரிவினையைப் புனிதப்படுத்தி அதை நிரந்தரமானதாக, பிறப்பு அடிப்படையிலானதாக மாற்றிக்கொண்டனர் என்கிறார் அவர்.
“முற்கால வேதங்களில் நால் வருண அமைப்புகூட இல்லை. பிற்கால வேதங்கள் கூட மூவருண அமைப்பைப் பற்றியே பேசுகின்றன. இதுவே ‘த்ரேயி’ எனப்படுகிறது என்கிறார் வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர்.
அதாவது ஆரிய இனத்துக்குள்ளேயே இருந்த சடங்குப் பிரிவு, படைப் பிரிவு, மற்ற பொதுமக்கள் என்பதே இந்த தொடக்க கால வருணப் பிரிவினை.
நான்காவது வருணம் எப்படி வந்தது?
ஆரியர்கள் நாடோடிகளாக, இடம் பெயர்ந்துகொண்டே இருந்தவரை இந்தப் பிரிவினையே இருந்தது. கங்கைக் கரை முதலிய இடங்களை அடைந்து அவர்கள் நிரந்தரமாக குடியேறிய பிறகு அவர்கள் நாகரிக சமூகத்தோடு தொடர்புகொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களில் சிலரை ஆள்வோராக ஏற்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது.
அந்த நிலையில் அவர்களைக் கட்டுப்படுத்தி தங்களுக்கு ஏற்றமுறையில், ஆரிய பிராமணர்களின் தலைமையை ஏற்று ஆட்சி செய்யவைப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களே ஸ்மிருதிகள்” என்று கூறும் கருணானந்தன், இவர்கள் புதிதாக தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட ஆரியர்கள் அல்லாத கருப்பு நிறம் கொண்ட மக்கள் ஏற்கனவே நாகரிகம் மிகுந்தவர்களாக, கட்டடங்களைக் கட்டுவது, கருவிகளை செய்வது உள்ளிட்ட பலவற்றை அறிந்தவர்களாக இருந்தனர். ஆரியர்கள் அல்லாத இந்த மக்களைக் குறிக்கவே சூத்திரர் என்ற புதிய பிரிவை நான்காவதாக ஸ்மிருதிகள் இணைத்தன என்கிறார்.
“சூத்திரம் என்றால் தொழில் திறம் (Technique) என்று பொருள். எனவே சூத்திரம் அறிந்தவர்கள் சூத்திரர்கள்.
அதுவரை ஆரியர்கள் பெரிய கட்டுமானங்களைக் கட்ட அறியாதவர்கள். அதிகபட்சம் பர்ணசாலைகளே அவர்களது கட்டுமானங்கள். எனவே தொழில்திறம் மிக்கவர்களான நாகரிக மக்களை அவர்கள் வென்று அழிப்பதற்குப் பதிலாகப் பயன்படுத்திக்கொள்ளவே விரும்பினர். எனவே அவர்களை எப்படி ஆள்வது என்பதையும் உள்ளடக்கிய விதிகளே ஸ்மிருதிகள்.
உள்ளூர் மக்களில் சிலருக்கு ஆட்சி அந்தஸ்து தரும்போது அவர்கள் ஷத்ரியர்கள் என அங்கீகரிக்கப்பட்டார்கள். அவர்கள் இந்த ஸ்மிருதிகள் வகுத்த சட்டதிட்டங்களை ஏற்றே ஆட்சி புரிந்தார்கள்.
அத்தகைய கருப்பு நிறம் கொண்ட உள்ளூர் ஆட்சியாளர்களே ராமர், கிருஷ்ணர் முதலிய அவதாரக் கடவுளர்கள் ஆனார்கள்.
பத்துக்கு மேற்பட்ட ஸ்மிருதிகள் உள்ளது தெரியும். ஆனால், 200க்கும் மேற்பட்ட ஸ்மிருதிகள் இருப்பதாக சொல்கிறார்கள். இவற்றில் ஒன்றுதான் மனு ஸ்மிருதி” என்பது கருணானந்தன் கருத்து.
மனுஸ்மிருதி என்ன சொல்கிறது?
- “மனுஸ்மிருதி இந்த நால் வருணங்களுக்கு இடையில் கலப்பு ஏற்படுவதை தண்டனைக்கு உட்பட்டதாக ஆக்கியது.
- வீட்டில் உழைப்பது, நிலத்தில் உழைப்பது, நூற்பது, நெய்வது போன்ற வேலைகளை செய்துவந்த மிகப் பெரிய உழைக்கும் பிரிவான பெண்களைக் கட்டுப்படுத்தும் விதிகளையும் மனு ஸ்மிருதி வகுத்தது.
- பெண்களுக்கு வர்ணம் இல்லை. உரிமையும் இல்லை. பெண்களுக்கு பூநூல் அணியும் உரிமை இல்லை. பெண்களுக்குத் திருமணம்தான் உபநயணம். பூப்பெய்தும் முன்னே கன்னிகா தானம் என்ற முறையில் திருமணம் செய்விக்கவேண்டும் என்று வரையறுக்கும் மனு ஸ்மிருதி, பெண்கள் தனியாக வாழ உரிமை மறுக்கிறது. அவர்கள் தந்தை, சகோதரன், கணவன், மகன் என்று யாரோ ஓர் ஆணின் பாதுகாப்பில் வாழ வேண்டியவர்கள் என்பதாகவும் அதனை வகுக்கிறது.
- குழந்தை பெற்றுத் தருவது பெண்களின் கடமை என்கிறது ஸ்மிருதி. குழந்தை பெற்றுத் தரும் தகுதி இல்லாத, நோய் வாய்ப்பட்ட, தொடர்ந்து பெண் குழந்தைகளையே பெற்றுத்தரும் பெண்களை விலக்கலாம் என்று மனுஸ்மிருதி வகுத்தது.
- அதைப் போலவே சூத்திரனுக்கும் உடமைகளோ, உரிமைகளோ இல்லை என்று வகுத்தது மனு ஸ்மிருதி.
நால் வருண அடுக்கில் உயர் அடுக்கில் உள்ள ஆண்கள் கீழ் அடுக்கில் உள்ள பெண்களோடு உறவு வைத்துக் கொள்வதை அது அனுமதிக்கிறது. இது அனுலோமம் எனப்படும். ஆனால், கீழ் அடுக்கில் உள்ளவர்கள் மேல் அடுக்கில் உள்ள பெண்களோடு உறவு கொள்வது தடுக்கப்படுகிறது” என்கிறார் கருணானந்தன்.
பிற்காலத்தில் சாகர், பார்த்திபர், கிரேக்கர் முதலிய பல இனத்தவர்கள் இந்தியாவுக்குள் படையுடன் நுழைந்தபோது அவர்களில் பலரை அரசராக ஏற்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. அப்போது, அவர்களில் இந்த நால்வருண அமைப்பை ஏற்று ஆட்சி நடத்த ஒப்புக்கொண்டவர்கள் ஷத்ரிய வருணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர் என்கிறார் அவர்.
மனு ஸ்மிருதி எழுதப்பட்ட காலம் ஏறத்தாழ கி.பி. முதல் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார் கருணானந்தன்.
https://www.youtube.com/watch?v=eKVKh8zC_B0
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்