சென்னை: மத நல்லிணக்க மனித சங்கிலி இயக்கத்தை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பால கிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.
மத நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசத் தந்தை காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில், தமிழ்நாட்டில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தது.
அண்ணல் காந்தியடிகளின் படுகொலை காரணமாக தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு, காந்தி பிறந்த நாளில் பேரணி நடத்திட நீதிமன்றம் அனுமதி கொடுத்தது பொருத்தமற்ற முடிவாகும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு அண்மைக் காலம் வரையிலும் நடந்த பல்வேறு மத வன்முறை, குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பு உள்ளது. அது பற்றிய வழக்குகளும் உள்ளன. அதன் காரணமாகவே, ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல் துறை அனுமதி வழங்கவில்லை. இந்தச் சூழலை நீதிமன்றம் கணக்கிலெடுத்திருக்க வேண்டும்.
இப்போது, சிறுபான்மை மத அடிப்படைவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், பெரும்பான்மை வகுப்புவாத, பாசிச வகைப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் பேரணி நடந்தால் அது மோசமான விளைவை உருவாக்கும்.
எனவே, நீதிமன்றம் கொடுத்த அனுமதியை மறுத்து காவல் துறை எடுத்துள்ள முடிவு 100 சதவீதம் நியாயமான ஒன்று. அதேசமயம், காந்தி பிறந்த நாளில், மத நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடத்துவதற்கும் அனுமதி இல்லை என்று செய்திகள் வருகின்றன. அவ்வாறானால் அது சரியான முடிவல்ல.
தமிழ்நாடு அரசு மதவெறி அமைப்புகளையும், மத நல்லிணக்க நடவடிக்கைகளையும் நேர்கோட்டில் வைத்து பார்ப்பது மதவெறி சக்திகளை தனிமைப்படுத்த உதவாது. இவ்விசயத்தில், தமிழ்நாடு அரசிடமும், காவல் துறையிடமும் சட்டப்படி அனுமதி பெற்று திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டத்தை நடத்த முயற்சி செய்வோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.