ஆர்எஸ்எஸ்ஸை ஆட்டம் காண வைத்த ஆ.ராசா!

சென்னை பெரியார் திடலில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். குறிப்பாக, யாரெல்லாம் இந்துக்கள் என அவர் தெரிவித்த சில கருத்துகள் சர்ச்சையானது. அதாவது, மனுஸ்மிருதியில் சூத்திரர்களும் பஞ்சமர்களும் எவ்வாறு வகைபடுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும், சாதி ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள் பற்றியும் அவர் விளக்கிப் பேசினார்.

ஆ.ராசாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. வட இந்தியர்களுக்கு புரியும் வகையில் இந்தியில் மொழி பெயர்த்தும் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டனர். இது அவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆ.ராசா போன்ற தலைவர்கள் தங்களது மாநிலத்தில் இல்லையே என்று அவர்கள் தங்களது ஏக்கத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, பெரியாரை படிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், வர்ண, சாதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வர்ண, சாதி ஆகியவற்றை நாம் முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என மோகன் பாகவத் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் உள்ள நாக்பூரில் நடைபெற்ற டாக்டர் மதன் குல்கர்னி மற்றும் டாக்டர் ரேணுகா போகா எழுதிய வஜ்ரசுசி துங்க் எனும் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், “சமூக சமத்துவம் இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் அவை மறக்கப்பட்டு மோசமான விளைவுகளுக்கு வழிவகுத்தது.” என்றார்.

வர்ண மற்றும் சாதி அமைப்பு பற்றி பேசிய அவர், இவற்றுக்கு பாகுபாடு என்பது இருந்ததில்லை. அதன் பயன்பாடு இருந்தது. இன்று யாராவது இந்த அமைப்புகளை பற்றி பேசினால் அது கடந்த காலம்; அதனை மறந்து விடுவோம் என்பதுதான் நமது பதிலாக இருக்க வேண்டும் என்றார்.

முந்தைய தலைமுறையினர் அனைத்து இடங்களிலும் தவறு செய்தனர். அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. எனவே, பாகுபாட்டை ஏற்படுத்தும் அனைத்து விஷயங்களையும் நாம் தூக்கியெறிய வேண்டும் எனவும் அவர் கூறினார். “முன்னோர்களின் தவறுகளை ஏற்றுக்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்கக்கூடாது. நம் முன்னோர்கள் செய்த தவறுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் அவர்கள் தாழ்ந்தவர்களாகி விடுவார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது நடக்காது, ஏனென்றால் அனைவரின் முன்னோர்களும் தவறு செய்தவர்கள்தான்.” என்று மோகன் பாகவத் பேசியுள்ளார்.

ஆ.ராசா எழுப்பிய கேள்விகள் சாமானிய மக்களின் அரசியலாகி விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னோர்கள் செய்த தவறை நாமும் செய்ய வேண்டாம்; அவை அவர்களோடு போகட்டும். வர்ணம், சாதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.