அமிர்தசரஸ்: வெளிநாட்டு போன் கால் மூலம் நடிகையின் தந்தைக்கு கொலை மிரட்டல் வந்ததால், போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
பஞ்சாபி நடிகையும், பாடகியுமான ஷானாஸ் கவுர் கில்லின் தந்தை சந்தோக் சிங்கின் செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டு போன் அழைப்பில் இருந்து மர்ம நபர் ஒருவர் பேசினார். எதிர்முனையில் பேசிய அவர், ‘தீபாவளிக்கு முன்பாக உங்களது வீட்டிற்கு வந்து துண்டு துண்டாக வெட்டிக் கொன்றுவிடுவேன்’ என்று அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த சந்தோக் சிங், போலீசில் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து போலீஸ் எஸ்எஸ்பி சப்னா சர்மா கூறுகையில், ‘சந்தோக் சிங்கிடம் இருந்து அனைத்து ஆதாரங்களையும் பெற்றுள்ளோம். இரண்டு முறை அவருக்கு வெளிநாட்டு போன் கால் வந்துள்ளது. சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது காதூர் சாஹிப் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோற்றார். கடந்த டிசம்பர் 25ம் தேதி சந்தோக் சிங்கின் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதுதொடர்பாக சிலரை கைது செய்தோம். தற்போது அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதால் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.