ஜோலார்பேட்டை: மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியடைந்த விவசாயி, உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தாயுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஜோலார்பேட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியை சேர்ந்தவர் சிவகாமி(55). இவரது மகன்கள் சந்தோஷ், சுதாகர், முரளி. சிவகாமியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து மகன்கள் சந்தோஷ், சுதாகர் ஆகியோரும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டார்களாம். இதையடுத்து கடைசி மகனான முரளியுடன் சிவகாமி வசித்து வந்தார்.
மேலும் அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு முரளிக்கு, இந்துஜா(20) என்ற பெண்ணுடன் திருமணமானது. கர்ப்பிணியாக இருந்த இந்துஜாவுக்கு நேற்று முன்தினம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. முரளியும் சிவகாமியும் குழந்தையை பார்த்துவிட்டு வீடு திரும்பினர். இந்நிலையில் நேற்று மதியம் தாயும் மகனும் ரத்த வாந்தி எடுத்து தனித்தனி அறைகளில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘தாய், மகன் இறந்து கிடந்த வீட்டில் வயலுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் இருந்தது. மேலும் உணவில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது.
இதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. சொத்துக்கு வாரிசாக ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று அக்கம்பக்கத்தினரிடம் தாயும் மகனும் பேசி வந்துள்ளனர். ஆனால் பெண் குழந்தை பிறக்கவே விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. வேறு காரணம் உள்ளதா எனவும் விசாரிக்கிறோம்’ என்றனர்.