கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள மாந்தரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (58). விவசாயம் செய்து வந்தார். நேற்று இரவு சின்னச்சாமி வீடு திரும்பவில்லை.

இதையடுத்து காலை சின்னச்சாமி சடலமாக கண்டறியப்பட்டார். இதுகுறித்து காரமடை போலீஸார் விசாரணையில் இறங்கினர். சின்னச்சாமி வளர்த்து வந்த ஆடு ஒன்று காணமால் போயுள்ளது.
அதுகுறித்து சின்னசாமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (26) என்ற இளைஞருக்கும் இடையே நள்ளிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ரஞ்சித், ஒற்றைக் குழல் நாட்டுத் துப்பாக்கியால் சின்னசாமியை சுட்டுள்ளார்.

இதில் சின்னச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சின்னச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், கொலை செய்த ரஞ்சித்தைப் பிடித்தும் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட தகவல்படி, நேற்றைய தினம் இரவு இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போதுதான் ஆடு மாயமானது குறித்த ஏற்பட்ட தகராறில் கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

ரஞ்சித்தின் கைக்கு துப்பாக்கி எப்படி வந்தது என்பது குறித்தும் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.