முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு..!!

தேர்தல் ஆணைய விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும். மேலும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தி நிர்வாகிகளையும் நியமிக்க வேண்டும். அந்த வகையில், தற்போது திமுகவில் 15-வது முறையாக உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. முதற்கட்டமாக பேரூராட்சி, ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரம் வரை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட செயலாளர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.

கட்சி ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் 64 மாவட்ட செயலாளர்கள் மீண்டும் அதே பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். 7 பேர் புதியவர்கள் ஆவார்கள். தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு மட்டும் தேர்தல் முடிவு இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள புனித ஜாா்ஜ் பள்ளி வளாகத்தில் திமுக பொதுக் குழுக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

பொதுக்குழுவில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளார் என்று உட்கட்சி தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார். அதேபோன்று, பொதுச் செயலாளராக அமைச்சா் துரைமுருகன், பொருளாளராக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு ஆகியோரும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனர்.

திமுக தணிக்கைக்குழு உறுப்பினர்களாக முகமது சகி, பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகிய 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளராக ஐ. பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.