சென்னை அடையாறு, கிரீன் வேஸ் சாலை, சாந்தோம் பிரதான சாலை, காந்தி மண்டபம் ஆகிய பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கம் (லைட் அவுஸ்) சந்திப்பில் இருந்து கிண்டி வரை பிரமாண்ட உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.
லைட் அவுசில் இருந்து கச்சேரி ரோடு, சாந்தோம் சந்திப்பு, பட்டினப்பாக்கம், கிரீன்வேஸ் சாலை, டாக்டர் முத்துலட்சுமி பூங்கா, அடையாறு, மத்திய கைலாஸ், கோட்டூர்புரம், செல்லம்மாள் கல்லூரி, சின்னமலை, கிண்டி வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 11 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்த மேம்பாலம் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
4 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட போக்குவரத்து ஆய்வுகளின்படி இரண்டு முக்கிய இடங்களையும் இணைக்கும் வகையில் இந்த மேம்பாலம் அமைப்பது என்று முடிவு செய்யப்படுள்ளது. இந்த பகுதிகளில் சாலையை அகலப்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.