சென்னை: சென்னை மாநகர காலநிலை மாற்ற செயல் திட்டம் தொடர்பான 250 பக்க வரைவு அறிக்கையை பொதுவில் வெளியிட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கை தொடர்பாக கருத்துப் பகிர்வு கூட்டம் இன்று (அக்.21) சென்னை எழும்பூரில் உள்ள சென்னை சமூகப் பணி பள்ளியில் நடைபெற்றது. இதில் சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை தொடர்பாக சென்னை ஸ்மாட் சிட்டி தலைமை செயல் அலுவலர் ராஜ் செரூபல் மற்றும் அவரது குழுவினர் விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். இதன் விவரம் :
நீரியல் வல்லுநர் ஜனகராஜன்: “காலநிலை மாற்றம் தொடர்பாக ஏற்படப்போகும் பாதிப்பு தொடர்பாக முறையாக ஆய்வு நடத்த வேண்டும். சென்னையில் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியான பாதிப்பு ஏற்படாது. வட சென்னை மற்றும் தென் பகுதியில் வெவ்வேறு மாதிரியான பாதிப்புகள் ஏற்படும். நகருக்கு உள்ளே உள்ள குடிசைப் பகுதிகள் மற்றம் கடலுக்கு அருகில் உள்ள குடிசைப் பகுதிகளிலும் வெவ்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படும். இந்த காலநிலை மாற்றம் செயல் திட்டம் தொடர்பாக அனைத்து துறைகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும். 250 பக்க அறிக்கையை பொதுவில் வெளியிட்டு கருத்து தெரிவிக்க வேண்டும்.”
பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்: “காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படப் போவது கடலோர பகுதி மக்கள்தான். ஆனால், அவர்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தவில்லை. உணவுப் பாதுகாப்புக்கு என்ன செய்யப் போகிறோம் என்பது இந்த செயல் திட்டத்தில் இல்லை. காலநிலை மாற்றம் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படப் போகும் பாதிப்பு குறித்து இந்த அறிக்கை பேசவில்லை.”
சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் பாக்கியம்: “சென்னை காலநிலை மாற்றம் தொடர்பாக சென்னை மாநகராட்சியே ஆய்வு ஒன்றை நடத்த வேண்டும். சென்னை நடைபாதை இல்லாத நகரமாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் நடைபாதைகளே இல்லாத நிலை உள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பாக திட்டங்களை செயல்படுத்தும்போது நகர்ப்புற வளர்ச்சி தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.”
இதைத் தவிர்த்து பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை தொடர்பாக தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.