'லைகர்' தோல்வி பஞ்சாயத்து : வீட்டை முற்றுகையிடும் போராட்டம்

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து பான் இந்தியா படமாக வெளிவந்த படம் 'லைகர்'. படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே இந்தப் படம் மிகவும் மோசமான படம் என ரசிகர்களின் கருத்துக்கள் வீடியோவாக வெளிவந்து படத்தை படுதோல்வி அடைய வைத்தது.

படத்தை வினியோகித்த ஆந்திரா, தெலங்கானா வினியோகஸ்தர்கள் அவர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். மேலும், தங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான பூரி ஜெகன்னாத்திற்கு கோரிக்கை வைத்தனர். அவரும் ஏற்றுக் கொண்டு நஷ்ட ஈடு தருவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், சொன்னபடி நஷ்ட ஈட்டுத் தொகையை சரியாகத் தரவில்லை போலிருக்கிறது.

இந்நிலையில் வினியோகஸ்தர்கள் பூரி ஜெகன்னாத் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது. நஷ்ட ஈட்டுத் தொகையை வாங்கும் வரை போராட்டம் நடத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

அதற்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் வாய்ஸ் மெசேஜ் மூலம் பதில் சொல்லியிருக்கிறாராம். அதில், “என்னை பிளாக்மெயில் செய்கிறீர்களா ?. நான் யாருக்கும் பணத்தைத் திருப்பித் தர வேண்டியதில்லை. ஆனால், ஒரு நெறிமுறைக்குட்பட்டு பணத்தைத் திருப்பித் தருகிறேன். ஒரு மாதத்திற்குள்ள குறிப்பிட்ட தொகையைத் தருவேன் என உறுதியாகச் சொன்ன பிறகு, இப்படியெல்லாம் ஓவராகச் செய்தால், உறுதியளித்தபடி பணத்தைத் திருப்பித் தர எனக்கு விருப்பமில்லை. ஒரு கவுரவத்திற்காகத்தான் திருப்பித் தருகிறேன். இல்லையென்றால் நான் யாருக்கும் தர வேண்டிய அவசியமில்லை.

ஒரு படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றுவிட்டால், இந்த வினியோகஸ்தர்களிடம் இருந்து நான் பணத்தைப் பெற கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது. 'போக்கிரி' முதல் 'ஐஸ்மார்ட் சங்கர்' வரை நிறைய பணம் எனக்கு வரவேண்டி உள்ளது. அதையெல்லாம் பெற்றுத் தர இந்த சங்கம் எனக்காக பெற்றுத் தந்ததா ?. என்னுடைய ஒவ்வொரு படத்தை வாங்கும் வினியோகஸ்தரும், தியேட்டர்காரர்களும் பணக்காரர்களே, அவர்கள் படம் தோல்வி என்றால் சாலைக்கு வர மாட்டார்கள்.

இப்படி நேர்மையில்லாதவர்கள், வசூலைப் பற்றி பொய்யாகச் சொல்பவர்களுடன் தொழில் செய்வது விரக்தியாக உள்ளது. 'லைகர்' படத்தை வட இந்தியாவில் வாங்கிய அனில் தடானி படத்தின் உண்மையான வசூல் என்னவென்பதைச் சொன்னார். அது நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருந்தது. அதனால்தான் அவருடன் உட்கார்ந்து பேச விரும்புகிறோம். ஆனால், இங்கு படத்தை வாங்கியவர்களுடன் பேச வெறுப்பாக உணர்கிறோம்.

அவர்கள் போராட்டம் நடத்தினால், அதில் கலந்து கொள்பவர்கள் யார் என லிஸ்ட் எடுத்து, அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு மட்டுமே பணத்தைத் திருப்பித் தருவேன்,” என தெலுங்கு வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் பற்றி காட்டமாகச் சொல்லியுள்ளார் என டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.