உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில், கிராமசபை போல நகரசபை மற்றும் மாநகரசபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வரும் நவம்பர் 1ஆம் தேதி இந்த கூட்டங்கள் நடைபெற உள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி – தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பின் படி 2022-ம் ஆண்டு முதல் நவம்பர் 1-ம் நாள் உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில், கிராமசபைக் கூட்டம் போல் தமிழ்நாட்டில் முதல்முறையாக நவம்பர் 1-ம் தேதி நகரசபை, மாநகர சபை கூட்டம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வார்டிலும் நடைபெற உள்ள நகரசபை, மாநகரசபை கூட்டங்களில் மக்கள் குறை கேட்கப்படும்.
இதில், தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பம்மல் பகுதியில் நடைபெறும் வார்டுசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதற்காக, முன்னேற்பாடுகளை பம்மல் பகுதிகளில் அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.