கடன் வாங்காமல் வாழ்வது எப்படி..?: தமிழக நிதியமைச்சர் சொல்லும் ஐடியா..!

நாளை (அக்.30-ம் தேதி) உலக சிக்கன நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக மக்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகம் முழுவதும் நாளை உலக சிக்கன நாள் கொண்டாடப்படுவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைவதுடன் என் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில், 1985-ம் ஆண்டு முதல் அக்டோபர் 30-ம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்’ என்ற குறளில், ஒருவன் தனது செல்வத்தின் அளவை அறிந்து அதற்கு ஏற்றபடி வாழா விட்டால் அவன் வாழ்க்கை, செல்வம் இருப்பது போலத் தோன்றினாலும் செல்வம் இழந்து வாழ்க்கைக் கெடும் என்று திருவள்ளுவர் கூறியதோடல்லாமல் மனித வாழ்க்கையில் சேமிப்பின் முக்கியத்துவத்தை சிறப்பாக ஈரடிகளில் விளக்கியுள்ளார்.

சிறுகச் சிறுகச் சேமிப்பதன் மூலம் குடும்பத்திற்குத் தேவைப்படும் அவசரத் தேவைகளை எளிதில் எதிர் கொள்ளலாம். பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வீடு கட்டுதல் போன்ற செலவினங்களை கடன் வாங்காமல் மேற்கொள்ளலாம். ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயில் ஒரு பகுதியை பாதுகாப்பான வழியில் சேமிப்பது தான் சிறந்தது.

மக்கள் தங்கள் சேமிப்புத் தொகையை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்தால்தான், அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அவ்வாறு முதலீடு செய்த பணத்தை தக்க தருணத்தில் திரும்பப் பெற முடியும். இந்த வகையில் அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சிறுசேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பானவை. தமிழக மக்கள் அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து உயர்ந்திட இந்த உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.