
சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி கல்லூரி மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தயாரிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி புகார் அளித்திருந்தார். அதில், கோவையில் கல்லூரி படித்து கொண்டிருந்த போது, கதாநாயகியாக நடிக்க வாய்ப்பளிப்பதாக வெளிவந்த விளம்பரத்தை கண்டு அந்த நம்பரை தொடர்பு கொண்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள விடுதியில் நடிகைகள் தேர்வு நடைபெறுவதை அறிந்து கொண்ட அவரும், அங்கே சென்றுள்ளார். விடுதியில் கரூரை சேர்ந்த பார்த்திபன் (30) என்பவர் தன்னை தயாரிப்பாளராக அறிமுகம் செய்து கொண்டு மாணவியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

பின்னர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து மயக்கம் தெளிந்த பின் மாணவி கேட்டதற்கு திருமணம் செய்து கொள்வதாகவும், கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும் ஆசைவார்த்தை கூறி பல முறை வன்கொடுமை செய்துள்ளார்.
சினிமா மீது உள்ள ஆசையால் மாணவியும் அவரது பேச்சுக்கு உடன்பட்டுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் தயாரிப்பாளர் ஏமாற்றுவதை உணர்ந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மாணவியின் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தயாரிப்பாளரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், கோவையில் பதுங்கியிருந்த தயாரிப்பாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in