குழந்தைகளுக்கான உரிமைகளை அனைவரும் பெற அரசு உறுதியேற்கிறது: குழந்தைகள் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: குழந்தைகளுக்கான உரிமைகளை அனைத்து குழந்தைகளும் பெற, தமிழக அரசு உறுதியேற்பதாக குழந்தைகள் தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவ.14-ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாட்பபடுகிறது. இதை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்தி:

குழந்தைகளின் நலனில் அக்கறையுள்ள தமிழக அரசு அவர்களுக்கென பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.அதில் ஒன்றுதான் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் எந்தக் குழந்தையும் பசியோடு வகுப்பறையில் அமர்ந்திருக்கக்கூடாது என்பதுதான் அரசின் இலக்கு.

குழந்தைகளின் மனநலன், உடல்நலன் சார்ந்தவற்றில் கவனம் செலுத்தி அதற்கேற்ப பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. குழந்தைகள் ஏட்டுக்கல்வியையும் தாண்டி வாழ்க்கைக் கல்வியை கற்றுக் கொள்ளவேண்டும் என்கிற நோக்கில், சிறார் திரைப்பட விழா அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் நடத்தப்படுகிறது.

இப்படியான மகிழ்ச்சியான கல்வி கற்றல் நம் பள்ளிகளில் உருவாகி இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு மாற்றம். சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கும் பிற குழந்தைகளுக்கும் இடையே இணக்கமான நல்லுறவு வளரவும், சகோதரத்துவமும் நட்புணர்வும் தழைக்கவும், என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ அனைத்தையும் செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.

குழந்தைகளுக்கான உரிமைகள் பொதுவானவை. அனைத்துக் குழந்தைகளுக்கும் அவற்றை உரித்தாக்க, தமிழக அரசு இந்தக் குழந்தைகள் நாளில் உறுதி ஏற்கிறது. குழந்தைகள் எதிர்கால தூண்கள் என்பதை கருத்தில் கொண்டு, கிராமப்புறக் குழந்தைகள், நகர்ப்புறக் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி, சமமான வாய்ப்பு பெற்று, ஒளிமயமான வாழ்வைப் பெறசிறந்த கல்வி, சமுதாய, பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதே இந்த அரசின் குறிக்கோளாகும். சிறார்கள் அனைவருக்கும் என் குழந்தைகள் நாள் வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.