'வெற்றி பெறாவிட்டால்..! இதுவே கடைசி' – மனமுருகிய சந்திரபாபு நாயுடு!

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அதுவே தனது கடைசித் தேர்தலாக இருக்கும் என, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார்.

ஆந்திர மாநிலத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி இருந்து வருகிறது.

175 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கு, வரும் 2024 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் இந்த சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், ஆந்திர மாநிலத்தில் தற்போதே தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் குர்னூர் மாவட்டத்தில் புதன் கிழமை இரவு நடைபெற்ற பேரணியில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

நான் சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டும் என்றால்.. நான் அரசியலில் இருக்க வேண்டும் என்றால்.. ஆந்திர மாநிலத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும். இல்லை எனில், அதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கும்.

எனது போராட்டம் குழந்தைகளின் எதிர் காலம்; மாநிலத்தின் எதிர்காலம் பற்றியது. நன்மை – தீமைகளை மக்கள் எடை போட வேண்டும். நான் சொல்வது சரியென்றால் எனக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். சிலர் என் வயதைக் கேலி செய்கிறார்கள். நானும், பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே வயதுடையவர்கள். ஜோ பைடன், 79 வயதில் அமெரிக்க அதிபரானார்.

நான் மீண்டும் முதலமைச்சர் ஆனால் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்வேன். அதன் மூலம் வருவாய் அதிகரிக்கும். மேலும், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவோம். ஜெகன் மோகன் ரெட்டி அரசு கடன் வாங்கியதைப் போல் கடன் வாங்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2021 நவம்பர் மாதம் தனது மனைவியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் அவமரியாதை செய்ததாகத் தெரிவித்திருந்த சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்காமல் சட்டப்பேரவைக்குள் நுழையப் போவதில்லை என சபதம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.