ஜேர்மன் அகதிகள் இல்லத்தில் தீவைப்பு: தீவைத்தவர் யார் என தெரியவந்ததால் கடும் அதிர்ச்சி…


ஜேர்மனியில் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த இல்லம் ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில், அதன் பின்னணியில் சதிவேலை இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

தீப்பிடித்து எரிந்த அகதிகள் இல்லம்

சென்ற மாதம் வடகிழக்கு ஜேர்மனியிலுள்ள Mecklenburg-Vorpommern மாகாணத்தில் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹொட்டல் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதனால் பல மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டது. ஆனாலும், அதிர்ஷ்டவசமாக அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த 17 பேரும் காயமின்றித் தப்பினார்கள்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் சதிவேலை இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

மறுபக்கமோ, அரசியல்வாதிகள் இந்த சம்பவத்துக்காக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்ட விடயங்களும் நிகழ்ந்தன.

ஜேர்மன் அகதிகள் இல்லத்தில் தீவைப்பு: தீவைத்தவர் யார் என தெரியவந்ததால் கடும் அதிர்ச்சி... | Arson At German Refugee Home

Photograph: Jens Büttner/AP

தீவைத்தவர் யார் என தெரியவந்ததால் அதிர்ச்சி

இதற்கு முன் இதே பகுதியில் இதேபோல் 9 முறை தீவைப்பு முயற்சிகள் நடந்துள்ளன. அதன் தொடர்ச்சியானதுதான் இந்த அகதிகள் இல்ல தீவைப்பு சம்பவமும் என தாங்கள் நம்புவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், 32 வயது நபர் ஒருவர் பொலிசாரிடம் சிக்கினார்.

அந்த நபர் தனது இளம் வயது முதல் தீயணைக்கும் சேவையிலிருக்கும் ஒரு தன்னார்வலர் ஆவார்.

அகதிகள் இல்லத்தில் தீப்பிடித்தபோதும், இந்த நபரும் அங்கு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அந்த ஹொட்டலில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத்துறையினரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டபோது, இவர் மட்டும் மாற்றி மாற்றி பதிலளித்துள்ளார்.

உஷாரான பொலிசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், இதற்கு முன் தீப்பிடித்த நான்கு இடங்களில் கைது செய்யப்பட்ட அந்த நபர் இருந்ததைப் பார்த்ததாக பலர் சாட்சியமளித்தனர்.

அவர் ஒரு இடத்துக்கு காரில் வந்ததையும், அங்கு தீப்பிடித்ததும், அங்கிருந்து அவர் விரைவாக வெளியேறியதையும் ஒருவர் பார்த்துள்ளார்.

ஆக, தீயணைப்புத்துறையில் இருந்த ஒருவரே பல இடங்களில் தீவைப்பு சம்பவங்களின் பின்னணியில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் விடயம் ஜேர்மனியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.