புதுடெல்லி: கட்சி அலுவலகத்தை சூறையாடிய ஓ.பன்னீர்செல்வம் எந்த நிவாரணமும் பெற தகுதி இல்லாதவர் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். எனவே, ஓ.பன்னீர்செல்லம் தாக்கல் செய்த மனு அற்பமான ஒன்று. தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்பவும், கட்சியின் நலன் கருதியும் ஒற்றைத் தலைமை ஏற்படுத்தப்பட்டது. கட்சியின் பொதுக்குழுவுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது. எனவே, அதன் முடிவே இறுதியானது.
கட்சியின் செயல்பாடுகளில் முடக்கம் ஏற்பட்டதால்தான் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதுவே, பொதுக்குழுவிலும் பிரதிபலித்தது. ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சி அலுவலகத்தை சூறையாடி, கட்சியின் விதிகளை மீறியுள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளார். எனவே, அவர் எந்த நிவாரணமும் பெறத் தகுதி இல்லாதவர். கட்சி பொதுக்குழு கூட்டப்படுவதற்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டது” என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.