ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கடனை திரும்பி அளிக்கக்கோரி தனியார் நிதி நிறுவனம் கொடுத்த நெருக்கடியால் உரக்கடை உரிமையாளரும், மனைவியும் விசமருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யம்பாளையத்தை சேர்ந்த திருமூர்த்தி, சில ஆண்டுகளுக்கு முன்பு சிட்டி யூனியன் வங்கியில் கடன் வாங்கி புதிதாக வீடு கட்டியுள்ளார்.
பின்னர் வாஸ்து ஹோம் லோன்ஸ் பைனான்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் கடன் பெற்று, வங்கியில் வாங்கிய கடனை திரும்ப கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் உரக்கடையில் எதிர்பார்த்தது போல வருமானமில்லை எனவும், இதனால் வாஸ்து ஹோம் லோன்ஸ் பைனான்ஸ் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய தொகையை திருமூர்த்தியால் கொடுக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே மனவேதனையில் இருந்த திருமூர்த்தியும், மனைவி சித்ராவும் மகன் கார்த்திக் நேற்றிரவு நண்பர் வீட்டுக்கு சென்ற நேரத்தில் தற்கொலை செய்து கொண்டனர்.
2 பேரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.