புல்தானா: பழங்குடியினருக்கு அதிகாரமளிக்கும் சட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பலவீனப்படுத்தி வருகிறது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆதிவாசி பெண் பணியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி இதுகுறித்து மேலும் கூறியதாவது:
பழங்குடியினர் மட்டுமே இந்த நாட்டின் “முதல் உரிமையாளர்” என்பதை எனது பாட்டி (முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி) அன்றே கூறியுள்ளார். இதர மக்கள் போலவே அவர்களுக்கும் சமமான அனைத்து உரிமைகளும் இந்த நாட்டில் உள்ளது. பழங்குடியினருக்கு அதிகாரமளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டங்கள் அனைத்தையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
பழங்குடியினரை “வனவாசிகள்” என்று பிரதமர் நரேந்திர மோடி அழைத்து வருகிறார். “ஆதிவாசி’’, “ வனவாசி’’ என்ற வார்த்தைகளுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. வனவாசி என்றால் காடுகளில் மட்டும்தான் வாழ முடியும். நகரங்களில் வாழ முடியாது. டாக்டராகவும், பொறியாளராகவும் ஆக முடியாது. விமானத்தில் பயணம் செய்ய முடியாது.
பழங்குடியினரின் நிலத்தைப் பறித்து தனது தொழிலதிபர் நண்பர்களுக்கு வழங்குவதையே பிரதமர் மோடி விரும்புகிறார். மோடி ஆட்சியில் பலவீனப்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கான சட்டங்கள் அனைத்தையும் நாங்கள் (காங்கிரஸ்) ஆட்சிக்கு வந்தால் வலுப்படுத்துவோம். உங்கள் நலனுக்கான மேலும் பல புதிய சட்டங்களை உருவாக்குவோம்.
பழங்குடியினரின் கலாச்சாரம், வரலாற்றை நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டால் நாட்டைப் பற்றியும் நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஒற்றுமை பாதயாத்திரையில் தனது இளைய அபிமானியை தோளில் சுமந்து செல்லும் காங்கிரஸ்.