ஆத்தி… என்னா குளிரு… இது சென்னையா? இல்ல ஊட்டியா? பகலிலே ஏன் இப்படி நடக்குது தெரியுமா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நடந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிவிடும். அந்த வகையில் நடப்பு சீசனில் இருமுறை பருவமழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு டாடா காட்டி விட்டு எங்கே போனது என்றே தெரியவில்லை. வானிலை அறிக்கையில் இப்போ வரும். அப்போ வரும் என்ற எச்சரிக்கை தான் வருகிறது.

ஆனால் மழையை காணோம். அதற்கு பதிலாக குளிர் தான் வாட்டி வதைக்கிறது. இதென்ன மழைக் காலம் அதற்குள் முடிந்து, குளிர்காலம் தொடங்கி விட்டதா? என்ற எண்ணத் தோன்றுகிறது. கடந்த சில நாட்களாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் குளிர் நிலவியது. இந்த லிஸ்டில் தற்போது சென்னையும் சேர்ந்து கொண்டது.

அதுவும் கடந்த சில ஆண்டுகளில் காணாத வகையில் குளிர் வாட்டுகிறது. மாலை வேளையிலேயே குளிர் ஆரம்பித்து விடுவதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு சென்று திரும்புவோர் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் இரவு மற்றும் காலைப் பொழுதை கடப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. எப்போது வெயில் வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதிகாலை நேரத்தில் வாக்கிங் செல்வோர் நிலை தான் மிகவும் மோசம். ஏன்டா வந்தோம்? என்ற அளவிற்கு போட்டு தாக்கி விடுகிறது. கொஞ்சம் சூரியன் எட்டி பார்க்கட்டும். அப்புறம் வேளிய போகலாம் என்ற முடிவை பலரும் எடுத்து வருகின்றனர். மற்றவர்கள் குளிரை தணிக்க ஸ்வட்டர், மழை கோட் என கையில் கிடைத்ததை எடுத்து மாட்டிக் கொண்டு புறப்பட்டு விடுகின்றனர்.

அதான் விடிந்து விட்டதே… குளிர் போய்விடும் என்று பார்த்தால் அதுதான் இல்லை. காலை 9 மணி வரை குளிர்ச்சி தான். குழந்தைகள், வயதானவர்கள் தான் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த சூழலில் தான் தமிழ்நாடு வெதர்மேன் போட்ட பதிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதில், நவம்பர் மாதம் ஊட்டியை போல சென்னை காணப்படுகிறது. ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.

மே மாதம் கடற்பகுதியில் புயல் மையம் கொண்டிருந்தால் வடக்கு நோக்கி வறண்ட காற்று வீசி 40 டிகிரி வரை வெப்பநிலை வாட்டி எடுத்துவிடும். அதுவே நவம்பரில் மழை எதுவும் பெய்யாமல் புயலோ அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமோ கடற்பகுதியில் மையம் கொண்டிருந்தால் இப்படித்தான் குளிரும். இரண்டு விஷயங்களால் சென்னையின் வெப்பநிலை குறையும். ஒன்று பலத்த மழை.

மற்றொன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலப்பகுதிக்கு நகராமல் வங்கக் கடலிலேயே நிலை கொண்டிருப்பது. வரலாற்றிலும் இதேபோல் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. குறைந்தபட்சமாக 1985ஆம் ஆண்டில் 23.6 டிகிரி செல்சியஸ் நிலவியது. அந்த பட்டியலில் இன்றைய தினம் (நவம்பர் 22) 24.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.