ஒருநாளின் தொடக்கமும், முடிவும் படுக்கையறையில் தான் இருக்கும். சுகாதாரம் என்று வரும்போது அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் மக்கள், தங்கள் படுக்கையறைப் பக்கம் திரும்பிப் பார்க்க மறந்து விடுகிறார்கள். எத்தனை பேர் தொடர்ச்சியாக தங்களது படுக்கையையும், போர்வையையும் சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள் என்ற கேள்விக்கு, பெரும்பாலானவர்களிடமிருந்து, இல்லை என்ற பதில்தான் மிஞ்சும்.

உங்களுக்குத் தெரியுமா…?, `போர்வைகளை மாற்றாமல் அல்லது துவைக்காமல் இருப்பது குடல்வால் அழற்சி, நிமோனியா, கொனோரியா என மூன்று பெரிய நோய்களின் அபாயத்தை நமக்கு ஏற்படுத்தும்’ என தூக்கவியல் நிபுணர்கள் (Sleep Experts) தெரிவித்துள்ளனர்.
அதாவது “நம்முடைய உடலைவிட, செல்களிலேயே அதிக பாக்டீரியா கிருமிகள் உள்ளன. நாம் படுக்கையில் தூங்கும் போது, நம்முடைய உடலானது ஒவ்வோர் இரவும், சருமத்தின் இறந்த செல்களோடு திரவங்களையும், எண்ணெயையும் வெளியேற்றும்.
இந்த செல்கள் நம்முடைய போர்வையில், படுக்கை விரிப்புகளில் ஒட்டிக் கொள்ளும். இது தூசு மற்றும் பூச்சிகளை வெகுவாக ஈர்க்கும். இவை சில மனிதர்களில் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
இவை ஏதும் அறியாமல் நாம் மீண்டும் படுக்கைக்குச் செல்லும் போது, அவை சருமத்தோடு ஒட்டிக் கொண்டால் அரிப்பு, எரிச்சல் ஏற்படுவதோடு நிமோனியா, குடல்வால் அழற்சி போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுதலாம்.

ஒருவேளை ஒட்டுண்ணிகள் அல்லது பாக்டீரியா கிருமிகள் செரிமான பாதையில் நுழைந்துவிட்டால், குடல்வால் வெடிப்பு ஏற்படுவதோடு, கடுமையான தொற்று ஏற்படவும் வாய்ப்புண்டு.
இதனால் நம்முடைய படுக்கை விரிப்புகள் மற்றும் போர்வைகளை வாரத்திற்கு ஒருமுறையேனும் சுத்தம் செய்ய வேண்டும். துவைத்த போர்வையை சூரிய வெளிச்சத்தில் படும்படி நன்றாகக் காயவைத்து பின், உபயோகிக்க வேண்டும்.
போர்வைகளைச் சுத்தப்படுத்த அல்லது மாற்றத் தவறும் பட்சத்தில், இது பல அறிகுறிகள் மூலமாக நமக்குப் புலப்படலாம். கண்களில் அரிப்பு, மூக்கு ஒழுகுதல், இருமல், தும்மல், சருமத்தில் உண்டாகும் தடிப்புகள் போன்றவை ஏற்படலாம். நோய் வாய்ப்பட்டவர்கள் அல்லது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி இவற்றைத் துவைத்துப் பயன்படுத்துவது நல்லது” என்று தெரிவித்துள்ளனர்.