புதுடில்லி ‘ஹீரோ எலக்ட்ரிக்’ நிறுவனம், ‘பேட்ரிக்ஸ்’ எனும் ‘பேட்டரி பேக்’ தயாரிப்பு நிறுவனத்துடன் ஒன்றிணைந்து, மிகவும் பாதுகாப்பான, புதிய பேட்டரி பேக்கை தயாரித்து வெளியிட்டுள்ளது.
சிறப்பான பேட்டரி மேலாண்மை திறன், அதிநவீன ‘ஐ.பி., 67’ வெப்ப பாதுகாப்பு கொண்ட இந்த பேட்டரி பேக், ‘ஏ.ஐ.எஸ்., 156’ விதிமுறைக்கேற்ப, பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிகள், அனைத்து ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் பயன்படுத்தப்பட உள்ளன. அடுத்த ஓராண்டில், 3 லட்சம் பேட்டரிகளை தயாரிக்க இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சோஹிந்தர் கில் கூறியதாவது:
மின்சார வாகனங்களுக்கு இதயமாக செயல்படும், மிகவும் விலை உயர்ந்த, அதிக உணர்திறன் கொண்ட இந்த பேட்டரிகளின் செயல்திறன், சுற்றுச்சூழலை பொறுத்து தான் இருக்கிறது. அதனால், இந்திய வானிலை மற்றும் சாலைகளுக்கு ஏற்றவாறு, ‘பேட்ரிக்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, இந்த பேட்டரி பேக்கை உருவாக்கியுள்ளோம். இந்திய மின்சார வாகனத் துறைக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தேவையான, பாதுகாப்பான தொழில்நுட்பங்களை தொடர்ந்து வழங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement