சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் மோதிக் கொண்டது, அதுதொடர்பாக தேசிய தலைமை ஒப்புதல் இன்றி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்றவற்றால், கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் மீது காங்கிரஸ் தலைமை அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரையும் அழைத்து விளக்கம் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான தமிழ்நாடு காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக விளக்கம் அளிக்க கட்சியின் மாநிலப் பொருளாளர் ரூபி மனோகரன், எஸ்சி அணித் தலைவர் ரஞ்சன்குமார் ஆகியோர் 24-ம் தேதி நேரில் ஆஜராகும்படி கட்சியின் மாநில ஒழுங்குநடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
தற்காலிக நீக்கம் நிறுத்திவைப்பு: அதன்படி 24-ம் தேதி நடந்த கூட்டத்தில் ரூபி மனோகரன் ஆஜராகாமல், கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். இந்நிலையில், ரூபி மனோகரனை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக ராமசாமி அறிவித்தார். அதற்கு பல்வேறுநிலைகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அன்று இரவே, ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம் மற்றும், அவர் மீதான விசாரணை ஆகியவற்றை நிறுத்தி வைப்பதாக தினேஷ் குண்டுராவ் அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, தமிழககாங்கிரஸில் உள்ள 18 எம்எல்ஏக்களில் 9 பேர் நேற்று முன்தினம்டெல்லி சென்று கட்சியின் தேசியதலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைச் சந்தித்து, மோதல் விவகாரத்தில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களிடம், கட்சியின் தேசியஅமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை சந்திக்கும்படி கார்கே அறிவுறுத்தியுள்ளார். எம்எல்ஏக்களும் வேணுகோபாலை நேற்று சந்தித்து தங்கள் கோரிக்கையை முன்வைத்துவிட்டு, சென்னை திரும்பினர்.
தலைமைக்கு அதிருப்தி: இந்நிலையில், பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சினையை சத்தியமூர்த்தி பவனில் மோதலாக மாற்றியது, தினேஷ் குண்டுராவும், கே.ஆர்.ராமசாமியும் தேசிய தலைமை ஒப்புதல் பெறாமல் முடிவெடுத்தது டெல்லி தலைமையை அதிருப்திக்கு உள்ளாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, இருவரையும் நேற்று நேரில் அழைத்து விசாரணை நடத்தியுள்ளார் கே.சி.வேணுகோபால். அப்போது விளக்கம் அளித்த ராமசாமி, ‘‘ரூபி மனோகரன் நேரில் ஆஜராகாமல், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோரையும் விசாரணை நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அவர் ஆஜராகி விளக்கம் அளிக்கும்வரை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கினேன்’’ என்று கூறியதாகக் கூறப்படுகிறது.
கே.எஸ்.அழகிரி மறுப்பு: அதேபோல், ‘‘இந்த விசாரணை வெளிப்படையாக இல்லை என்பதால், அந்த உத்தரவை நிறுத்திவைத்து உத்தரவிட்டேன்’’ என்று தினேஷ் குண்டுராவ் விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து விரைவில்கட்சி தலைமை தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேற, மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியோ, ‘‘உள்கட்சி விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களில் பேசமாட்டேன்’’ என மறுத்து வருகிறார்.