‘கடின முடிவு எடுக்க கட்சி தயங்காது’கெலாட்- பைலட்டுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

இந்துார்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும்  சச்சின் பைலட் இடையேயான அதிகார மோதலுக்கு மத்தியில், ‘கட்சிக்காக கடினமான முடிவுகளையும் எடுக்க தயங்கமாட்டோம்’ எனக்கூறி காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ் எச்சரித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும்   இடையே மோதல் நீடித்து வருகிறது. சமீபத்தில் சச்சின் பைலட்டை துரோகி என்று கெலாட் கூறினார். அதற்கு பதிலடியாக, என் மீது அவதுாறாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று பைலட் கூறினார்.
 
தற்போது மபியில் ராகுல் காந்தி எம்பி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.  வரும் 4ம் தேதியில் இருந்து ராஜஸ்தானில் அவர் நடைபயணம் துவங்குகிறார். இந்நிலையில், காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெயராம் ரமேஷிடம் இது பற்றி கேட்ட போது, ‘‘ராஜஸ்தானில் கட்சி பிரச்னைக்கு முறையான தீர்வு காண கட்சி தலைமை முயன்று வருகிறது. கட்சி அமைப்பு எங்களுக்கு முக்கியம். இரண்டு பேருக்கும் சமரசம்  ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு  இருந்தால் அதையும் செய்வோம். தேவைப்பட்டால் கட்சிக்காக  கடினமான முடிவுகளையும் எடுக்க தயங்கமாட்டோம்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.