ஆமதபாத்: குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது உறுதி என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தல், டிச., 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கவுள்ளது. ‘டிச., 8ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்’ என, தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் டிச., 1ம் தேதி 89 தொகுதிகளுக்கும், 5 ம் தேதி 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சூரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: நாங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளின் படி ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. பாஜக மீதான அச்சத்தால் அவர்கள் இதை வெளிப்படையாக சொல்வதில்லை.

பணவீக்கமும் வேலை வாய்ப்பு இன்மையும் மக்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. குஜராத்தில் வைர வியாபாரிகள் ஆம் ஆத்மிக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இளைஞர்கள், பெண்களின் ஆதரவு ஆம் ஆத்மி கட்சிக்குத்தான் உள்ளது. உங்களின் குடும்பத்தினரையும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டளிக்க வலியுறுத்துங்கள் என இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement