தி.மு.க இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க தொண்டர்களால் வெகுவிமரிசையாக நேற்று கொண்டாப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு தனது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பல நலத்திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்த உதயநிதி ஸ்டாலின், மிகமுக்கியமாக மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மரப்பாதையையும் திறந்துவைத்தார்.

அதைத் தொடர்ந்து, கடலில் கால்நனைத்திடாத பல மாற்றுத்திறனாளிகள், முதன்முறையாக மரப்பாதையின் வழியாக வீல்சேரில் சென்று ஆர்வமுடன் மெரினாவை கண்டு ரசித்தனர். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த உதயநிதி, “தடைகளை தன்னம்பிக்கையால் வெல்லும் சாதனை மனிதர்களான மாற்றுத்திறனாளிகள், கரையை கடந்து கடல் அலை காண, ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் மெரினாவில் அமைக்கப்பட்டிருக்கும் நிரந்தர பாதையை இன்று திறந்துவைத்தோம். சட்டமன்றத்தில் நான் வைத்த கோரிக்கைக்கு செயல்வடிவம் தந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி” என ட்வீட் செய்திருந்தார்.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் பயணிப்பதற்காக உருவாக்கப்பட்ட மரப்பாதையில் அவர்கள் தவிர்த்து பொதுமக்களே கூட்டம் கூட்டமாகப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இளைஞர்கள் பலர் பாதையின் இருபக்கங்களிலும் உள்ள தடுப்புகள் மீது ஏறிக்குதித்தும், அமர்ந்துகொண்டும் செல்ஃபி எடுத்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களும் எல்லைமீறி செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

மேலும், `இந்தநிலை நீடித்தால் மரப்பாதை விரைவில் சேதமாகிப்போகும். இது மாற்றுத்திறனாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, திட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும்’ என குமுறுகிறார்கள் மாற்றுத்திறனாளிகள். அதேபோல, `இவற்றைத் தடுப்பதற்கு உடனடியான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளவேண்டும். மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் தவிர்த்து பிற பொதுமக்கள் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும்’ என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மு.மகேஷ் குமாரிடம் பேசினோம். “மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட மரப்பாதையை அதிகமாகப் பொதுமக்களே பயன்படுத்திவருவதாகவும், பலர் சேதம் விளைவிக்கும்படி நடந்துகொள்வதாகவும் வெளியாகியிருக்கும் செய்தி எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. ஏற்கெனவே, நாளொன்றுக்கு சுழற்சி அடிப்படையில் மூன்று காவலாளிகளை நியமித்திருக்கிறோம். தற்போது அவர்களுக்கு `ஹேண்ட் மைக்’ கொடுத்து, பொதுமக்கள் யாரும் இந்தப் பாதையை பயன்படுத்தாமல், மாற்றுத்திறனாளிகளுக்கு வழிவிடவேண்டும் என `அனவுன்ஸ்ஸ்மெண்ட்’ செய்ய திட்டமிட்டிருக்கிறோம். மேலும், ரோந்து செல்லும் காவல்துறையினருக்கும், கடலோர கண்காணிப்புக் குழுவினருக்கும் மரப்பாலத்தை கண்காணிக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறோம். விரைவில், இந்தப் பிரச்னை முடிவுக்கு கொண்டுவரப்படும். மாற்றுத்திறனாளிகள் எந்தவித இடையூறுமின்றி பயணிக்கலாம்!” எனத் தெரிவித்தார்.
`நாட்டிலேயே முதன்முறையாக…’
சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டிருக்கும் மரப்பாதை இந்தியாவிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட திட்டம் என்கிறார் சென்னை மாநகராட்சியின் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி. மேலும், அவர் தெரிவிக்கையில், “மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்காக 263 மீட்டர் நீளத்துக்கு மரப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மரப்பலகையானது நீரில் கெட்டுப்போகாத சிகப்பு மெரண்டி, பிரேசிலின் வகை மரங்களால் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் எளிமையாக கடலருகே சென்று கடலின் அழகை கண்டு ரசிக்கலாம்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் 20 சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் காலத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பணியாளர்களை நியமிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காகவும் முதியோர்களுக்காகவும் அமைக்கப்பட்ட இந்த மரப்பாதையை பொதுமக்கள் சேதப்படுத்தக்கூடாது!” என்றார்.

மெரினா மரப்பாதையின் பின்னணி:
கடந்த 2021-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மெரினா கடலைக் கண்டு ரசிப்பதற்காக, தற்காலிகப் பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், நிரந்தர பாதை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. அதைத் தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், `மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு நிரந்தர பாதை அமைக்கவேண்டும்’ என தமிழ்நாடு சட்டமன்றத்தில் கோரிக்கை எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், `அடுத்த ஆண்டுக்குள் மெரினாவில் நிரந்தர பாதை அமைக்கப்படும்’ என உறுதியளித்தார். இந்த நிலையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 1.14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மெரினா கடற்கரையில் நிரந்தர மரப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இதேபோல பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை அமைக்கப்படவிருக்கிறது.