தஞ்சாவூரில் தலைவிரித்தாடும் தீண்டாமைக் கொடுமை: ரவிக்குமார் எம்.பி., புகார்!

தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். மேலும், தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியில் தலைவிரித்தாடும் தீண்டாமைக் கொடுமை தொடர்பாக மாநில எஸ்சி, எஸ்டி ஆணையத்துக்கும் முதலமைச்சர் அலுவலகத்துக்கும் ரவிக்குமார் எம்.பி., புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கிளாமங்கலம் தெற்கு என்ற கிராமத்தில் உள்ள டீ கடைகளில் இரட்டை குவளை முறையும், முடித்திருத்தும் கடையில் ஆதி திராவிடர் சமூக மக்களுக்கு முடி திருத்தம் செய்யாமலும் பல வருடங்களாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. இது தொடர்பாக ஆதிதிராவிட மக்களின் சார்பில் 02.10.2022 அன்று வட்டாட்சியர் அவர்களுக்கு புகார் மனு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு RI,மற்றும் VAO, ஆய்வு செய்து தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்துள்ளனர். அதன் பின் குற்றம் செய்தவர்கள் இனி இதுபோன்று தீண்டாமையைக் கடைபிடிக்கமாட்டோம் என எழுத்து பூர்வமாக அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், 25.11.2022 அன்று முதல் மீண்டும் அதே தீண்டாமைக் கொடுமை மீண்டும் தொடர்ந்துள்ளது. மேலும், 28.11.2022 அன்று கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஊர் கூட்டம் போட்டு அன்று முதல் ஆதிதிராவிடர்கள் யாருக்கும் மளிகைக் கடைகளில் பொருள் வழங்கக் கூடாது எனவும், முடிதிருத்தம் செய்யக்கூடாது எனவும் அது கிராம கட்டுப்பாடு எனவும் கூறி தடை விதித்துள்ளனர்.

அதனால் அந்த ஊரில் உள்ள KRS மளிகைக் கடை உரிமையாளர் சந்தோஷ் என்பவர் ஆதிதிராவிடர் சமூகத்தினருக்குத் தேவையான, பால் கூட தர முடியாது எனக் கூறியுள்ளார். ஆதிதிராவிடர் மக்களுக்கு மளிகை பொருள் வழங்கினால் ரூ.5000/- அபராதம் எனத் தடை போட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. கள்ளர் சமூகத்தினரின் வயல்வெளியில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் ஆடு மாடுகள் மேயக்கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

ஆதிதிராவிடர் தெருவுக்கு குடிநீர் வராமல் தடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிளாமங்கலம் ஆதி திராவிட மக்கள் சார்பில் தொலைபேசி மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் 28.11.2022 அன்று புகார் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 29.11.2022 அன்று பாப்பாநாடு காவல் நிலையத்தில் எழுத்துபூர்வமாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாநில ஆனையம் விசாரிக்க வேண்டுமெனவும்; தமிழ்நாடு முழுவதும் சட்ட விரோதமாகத் தீண்டாமையைக் கடைப்பிடிப்போர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.