பல்துறை பெண் சாதனையாளர்களைப் போற்றி, அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுபவை அவள் விருதுகள். அந்த வகையில் கடந்த 18-ம் தேதி சென்னையில் நடைபெற்ற 5-ம் ஆண்டு `அவள் விருதுகள்’ விழாவிலும் பலதுறை பெண் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பல கலைஞர்கள் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையே ஆட்டிப் படைத்திருக்கின்றனர். அப்படியொரு சாதனையாளர்தான் பாடகர் வாணி ஜெயராம். தன் பாடல்களாலேயே எல்லோரையும் கட்டிப்போடுகிற வசீகரக் குரலுக்குச் சொந்தக்காரர். ஒரு காலகட்டத்தில் இந்தித் திரையிசையில் முன்னணிப் பாடகியாக வலம் வந்தவர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், 3 தேசிய விருதுகள், பல மாநில விருதுகள் பெற்ற வாணி ஜெயராமுக்கு `கலை நாயகி’ விருது வழங்கப்பட்டது. தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், பாடகரும் மருத்துவருமான சீர்காழி சிவசிதம்பரமும் இணைந்து இவ்விருதினை வழங்கினர்.

“பாடகியாக எனது 52 ஆண்டுக்காலம் பயணித்திருக்கிற வேளையில் என் ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, `மல்லிகை என் மயங்கும்’ என்கிற அவரது ஆல்டைம் ஃபேவரைட் பாடலைப் பாடி அரங்கத்தினரை இசையினுள் திளைக்க வைத்தார். இன்றும் அதே வசீகரத்துடன் அவரது குரல் வெளிப்பட்டது.
விருது வழங்கிய பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், “அம்மா என்கூட சேர்ந்து ‘அபிநய சுந்தரி’ பாடலைப் பாடியிருக்காங்க. இவங்க ரொம்ப ராசியானவங்க. ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து இன்னைக்கும் என்னை வாழ்த்திக்கிட்டிருக்கவங்க. அம்மா எல்லா வகையான பாடல்களையும் பாடக்கூடியவங்க” என்று பூரிப்போடு சொன்னார்.
கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் என்பதோடு அகில இந்திய அளவில் வேளாண் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் என்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரர் கீதாலட்சுமி. விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் புத்துயிரூட்டுவதற்காக, பாரம்பர்ய விவசாய முறைகளுடன் நானோ தொழில்நுட்பம், டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளித்தல், ரோபோடிக்ஸ் என அதிநவீன தொழில்நுட்பத்தை இணைத்து, செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
சாகுபடியை அதிகரிக்கும் வியூகங்களை வகுக்கிறார். தமிழக அரசின் உழவன் செயலி, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கான செயல் திட்டங்கள் இவர் மேசையிலிருந்தே ஆரம்பிக்கின்றன. விவசாயத்தை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்காற்றி வரும் கீதாலட்சுமிக்கு, தவத்திரு.குன்றக்குடி அடிகளார் பசுமைப்பெண் விருதினை வழங்கினார்.

“எந்தப் பல்கலைக்கழகத்துக்கு மாணவியாக சைக்கிளில் சென்று படித்தாரோ, இன்று அதே பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கீதாலட்சுமி உயர்ந்திருப்பது பாராட்டுக்குரியது. இயற்கை வேளாண்மையும், நவீன தொழில்நுட்பமும் சேர்ந்து இயங்குவதுதான் மனித சமுதாயத்துக்கு நல்லது. குன்றக்குடி ஆதீனமும் 50 ஏக்கர் பரப்பளவில் வேளாண் அறிவியல் நிலையத்தை நிர்மாணித்துக் கடந்த 25 ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தி வருகிறது.
தாங்கள் உற்பத்தி செய்கிற விளைபொருள்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்கிற சூழல் உண்டாகிற போதுதான் விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்படும். அந்த நிலையை நோக்கி விவசாயிகள் நகர்வதற்கு கீதாலட்சுமி முயற்சி செய்கிறார் என்பது வரவேற்கத்தக்கது.” என்றார் குன்றக்குடி அடிகளார்.
விருதைப் பெற்றுக்கொண்ட கீதாலட்சுமி, ”விவசாயிகளுக்குப் பெண் கொடுக்க மாட்டார்கள் என்கிற நிலைமை இன்றைக்கு மாறி, விவசாயத்தையும் ஒரு தொழில்துறைபோல சமூகம் பார்க்க ஆரம்பித்து விட்டது. தற்போது பெருகி வரும் மக்கள்தொகை காரணமாக விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. 86 சதவிகித விவசாயிகள் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள்தான். இவர்களை லாபகரமான தொழிலதிபர்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை எங்கள் பல்கலைக்கழகம் எடுத்து வருகிறது” என்றார்.

ரேணுகா ராமகிருஷ்ணனுக்கு அப்போது 16 வயதுதான். அந்த வயதிலேயே, ஆதரவற்ற நிலையில் கவனிப்பாரன்றி இருந்த தொழுநோயாளியின் சடலத்தை அடக்கம் செய்து, தொழுநோயாளிகளுக்காகப் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே மருத்துவம் படித்தவர் ரேணுகா ராமகிருஷ்ணன். சரும மருத்துவம் படித்து, பின்னர் தொழுநோய் சிகிச்சைகளுக்கான சிறப்புப் படிப்பை முடித்துள்ளவர், மாநிலமெங்கும் தொழுநோயாளிகள் குடியிருப்புகளைத் தேடிச்சென்று மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். மருத்துவச் சேவையில் 35 ஆண்டுகளைத் தொட்டிருக்கும் இவருக்கு `சேவை தேவதை’ விருது வழங்கப்பட்டது.
ஓய்வு பெற்ற நீதியரசி பிரபா ஸ்ரீ தேவன் இவ்விருதினை அவருக்கு வழங்கிப் பெருமைப்படுத்தினார்.
“தமிழ் மண்ணில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன். நான் ஒரு மருத்துவர் என்பதைவிட சமூக சேவகி என்பதில்தான் பெருமை கொள்கிறேன். அவள் விகடன் விருதை வாங்குவதை தாய் வீட்டில் வாங்கிய விருதாகக் கருதுகிறேன். 35 ஆண்டுகளாக தொழுநோயாளிகளுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறேன். பெண்கள் எப்போதும் தைரியத்தை இழக்காதவர்களாகவும், தனது கொள்கையை விட்டுக்கொடுக்காதவர்களாகவும் இருக்க வேண்டும். எல்லோரும் நோய் நொடியின்றி வாழ்க” என்று ஏற்புரை வழங்கினார் ரேணுகா ராமகிருஷ்ணன்.

“நீங்கள் தொழுநோயாளிகளைத் தொட்டு சிகிச்சை அளிப்பதைப் பார்க்க முடிந்தது. தொழுநோய் குறித்த விழிப்புணர்வு நம்மிடையே இப்போதும் குறைவாக இருக்கிறதா?” என அவரிடம் கேட்டார்கள் தொகுப்பாளர்கள்.
“தொழுநோயாளிகளைத் தொட்டு சிகிச்சை பண்ணத்தான் டாக்டராகியிருக்கேன்… தொழுநோயாளிகளுக்கு தோலுக்கடியில் உள்ள உணர்ச்சி நரம்புகள் செயலிழந்து மரத்துப்போய் விடும். இன்றைக்கும் தொழுநோயாளிகள் என்றாலே ஒதுக்கி வைக்க நினைக்கிறார்கள். இந்நிலை மாறி, அவர்களையும் சமூகத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் தீவிரமாக வேலை செய்து வருகிறேன்” என்று சமூகத்துக்கு அழுத்தமான செய்தியைச் சொன்னார் ரேணுகா ராமகிருஷ்ணன்.