புதுடெல்லி: எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் மனித குலத்துக்கு அச்சுறுத்தல் நீடிக்கிறது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அறிஞர்களின் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அறிஞர்கள் பங்கேற்றனர். இதில் தீவிரவாதத்தை தடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது.
ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் பல்வேறு நாடுகளில் தனிநபராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புக்காக சிரியா உள்ளிட்ட நாடுகளில் நாச வேலைகளில் ஈடுபட்டவர்களில் சிலர் அவரவர் நாடுகளுக்கு ரகசியமாக திரும்பியுள்ளனர். அவர்களாலும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.
மேலும் எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் மனித குலத்துக்கு அச்சுறுத்தல் நீடிக்கிறது. தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். அந்த நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். அப்போதுதான் எல்லை தாண்டிய தீவிரவாத பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
இந்த மாநாட்டில் இந்தோனேசியாவைச் சேர்ந்த அறிஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். அரேபிய வணிகர்களால் இந்தோனேசியாவில் முஸ்லிம் மதம் பரவியது. இதேபோல இந்தியாவில் கேரளா, குஜராத்,மேற்குவங்கம், காஷ்மீரில் வணிகர்களால் முஸ்லிம் மதம் பரவியது.
பல்வேறு மதங்களைச் சேர்ந்தமக்கள் வசித்தாலும் இந்தியா, இந்தோனேசியாவில் சகிப்புத்தன்மை நிலைத்திருக்கிறது. இந்தோனேசியாவின் பாலி தீவில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அங்கு ஏராளமான இந்து கோயில்கள் உள்ளன. இதனால் ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் இந்தியர்கள் பாலி தீவுக்கு ஆன்மிக சுற்றுலா செல்கின்றனர்.
தீவிரவாதம், முஸ்லிம் மதத்துக்கு எதிரானது. சிலர் மதத்தை தவறாகப் பயன்படுத்தி தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கு எதிராக முஸ்லிம் அறிஞர்கள் குரல் எழுப்ப வேண்டும். அனைத்து மதங்களும் அமைதியை மட்டுமே வலியுறுத்துகின்றன. மதத்தின் பெயரால் தூண்டப்படும் தீவிரவாதத்தை தடுக்க வேண்டும். உணவு பற்றாக்குறை, பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களை மனித குலம் எதிர்கொண்டிருக்கிறது. அந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.