ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஜெனகாம மாவட்டம், சில்பூரில் உள்ள அரசு பள்ளி, 10 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு சேமிப்பையும், வங்கி செயல்படும் முறையையும் கற்றுத் தருகிறது.
இதனால், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் இணைந்து வங்கியை தொடங்கி அவர்களே நிர்வகித்து வருகின்றனர். வீட்டில் செலவுக்கு கொடுக்கும் பணத்தில் மிச்சப்படுத்தி, அந்த வங்கிக் கணக்கில் சேமித்து வருகின்றனர்.
இங்கு பணம் செலுத்தினால் ரசீது வழங்கப்படுவதுடன் பணம் எடுப்பதற்கென படிவமும் உண்டு. மேலாளர், காசாளர், வங்கி ஊழியர்கள் ஆகிய பதவிகளில் மாணவர்களே செயல்படுகின்றனர். இந்த வங்கிக்கு ‘ஸ்கூல் பாங்க் ஆஃப் சில்பூர்’ என பெயர் வைத்துள்ளனர். மாணவர்களுக்கு வங்கி பாஸ் புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளியின் முதல்வர் லீலா செய்தியாளர்களிடம் கூறும் போது, “வங்கி அதிகாரியை பள்ளிக்கு அழைத்து வந்து, அவரது வழிகாட்டுதலுடன் அக்டோபர் 15-ம்தேதி மாணவர்களால் வங்கி தொடங்கப்பட்டது. கடந்த 24-ம் தேதி நிலவரப்படி, மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.41 ஆயிரம் இருந்தது. வங்கி செயல்படும் முறை, பணத்தின் முக்கியத்துவம் போன்றவை தற்போது எங்கள் பள்ளி மாணவ, மாணவியருக்கு தெரிய வந்துள்ளது” என்றார்.
மாணவர்களிடத்தில் சேமிப்பை ஊக்குவிக்கும் இந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பெற்றோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதேபோல அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் ‘பள்ளி வங்கி’களை தொடங்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.