உலகிலேயே முதல்முறையாக மூக்கு வழி கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி: பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது

புதுடெல்லி: உலகிலேயே முதல்முறையாக, மூக்கு வழியாக செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த தடுப்பு மருந்தை, அவசரகாலப் பயன்பாட்டின் அடிப்படையில், பூஸ்டர் டோஸாகப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கிய பாரத் பயோடெக் நிறுவனம், தற்போது மூக்கு வழியாகச் செலுத்தப்படும் iNCOVACC கரோனா தடுப்பு மருந்தை, வாஷிங்டன் பல்கலைக்கழத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

குறைந்த செலவில் தயாரிக்கப்படும் இந்த தடுப்பு மருந்து, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவியாக இருக்கும்.அனைத்து கட்டப் பரிசோதனையிலும் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில், தற்போது தடுப்பு மருந்தை அவசரகால அடிப்படையில், பூஸ்டர் டோஸாகப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

உலகிலேயே முதல்முறையாக, மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்துக்கு, அவசரகாலப் பயன்பாட்டுக்கான ஒப்புதல் பெறும் நிறுவனம் என்ற பெருமை பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பு மருந்தை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா கூறும்போது, “மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தின் விலை விரைவில் அறிவிக்கப்படும். தற்போது கரோனா தடுப்பூசிக்கான தேவை குறைந்தாலும், தடுப்பூசி மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறோம். எதிர்காலத்தில் ஏற்படும் வைரஸ் தாக்குதலை சரியான முறையில் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.