நேற்று மதுரை மாவட்டத்தில் உள்ள டி.கல்லுப்பட்டியில் இருந்து விருதுநகருக்கு ஒரு அரசு மாநகர பேருந்து ஒன்று வந்தது. இந்த பேருந்து விருதுநகர் புல்லலக்கோட்டை சாலை வழியாக வந்த போது, அங்கிருந்த வேகத்தடையின் மீது ஏறி இறங்கியதில் பேருந்தின் பின்புற படிக்கட்டில் உள்ள கடைசி படி திடீரென உடைந்து கீழே விழுந்தது.
பேருந்தில் படிக்கட்டில் கடைசிக்கு முந்தைய படிகளில் பயணிகள் நின்றுள்ளனர். அவர்கள் கடைசி படி உடைந்த உடனே சுதாரித்துக்கொண்டு பக்கவாட்டு கம்பியை பிடித்துக்கொண்டு மேலே ஏறியுள்ளனர்.
இதையடுத்து உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது. அங்கிருந்தவர்கள் உடைந்து விழுந்த படியை தூக்கி கொண்டு வந்தனர்.
தமிழகத்தில், போக்குவரத்து கழக நிர்வாகம் தினமும் பேருந்துகளை பராமரிப்பதாக கூறினாலும் இது போன்ற சேதமடைந்த நிலையில் உள்ள பேருந்துகளை வழித்தடங்களில் அனுப்பாமல் முழுமையாக பழுது நீக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு இல்லை என்றால் விபரீதமான விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாகிவிடும் என்று பயணிகள் அச்சம் தெரிவித்தனர்.