திருக்கோயில்கள் அனைத்திலும் முக்கியமான இடத்தைப் பெறுவது `பலிபீடம்’. பொதுவாக ஆலயங்களில் பாதுகாவல் தெய்வங்களுக்கு அளிக்கப்படும் உணவான `ஸ்ரீபலி’ எனப்படும் அன்ன உருண்டையானது இந்தப் பலிபீடத்தின் மீது தினமும் வைக்கப்பெறுவது மரபு.
மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்து மஹாநந்தியின் பின்புறமுள்ள மிகப்பெரிய ‘பலிபீடம்’ புகழ்மிக்க வரலாற்றுச் சிறப்புடையது. சுமார் 1,200 வருடங்களுக்கு முன்பு, சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது, அவரது தந்தையார் சிவபாதகிருதயர் தமது வேள்விக்காகப் பொருள் தேவைப்படும் நிலையை உரைத்தாராம். இதனைச் செவியுறும் சம்பந்தர் ‘ஈசனின் திருவடிகளே அந்தமில்லா அரிய பொருள்’ என்று சிந்தித்து, ‘இடரினும் தளரினும்’ எனத் தொடங்கிடும் திருப்பதிகத்தினைப் பாடி, ஆவடுதுறை அரனாரை வணங்குகிறார்.

இப்பதிகத்தின் அருஞ்சுவையில் மகிழ்ந்திட்ட மாசிலாமணீஸ்வரப் பெருமானால் தாமதியாது அருளப்பெற்ற, அள்ள அள்ளக் குறையாத பொன்உலவாக்கிழியைச் சுமந்து வந்த சிவபூதம் அதனைப் பலிபீடத்தின் மீது வைத்து மீண்டதாக தலவரலாறு. இந்த அருமையான நிகழ்வானது ஆண்டுதோறும் திருவாவடுதுறை ஆலயத்தில் நடைபெறும் ரதசப்தமிப் பெருவிழாவின்போது, ஐந்தாம் நாள் ஐதிக விழாவாக இன்றளவும் திருமடத்தார்களால் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகி்றது.
அன்றைய தினம், திருவீதியுலா முடித்து, மீண்டும் ஆலயத்திற்குள் பல்லக்கில் பிரவேசிக்கும் திருஞானசம்பந்தப்பெருமானை, ஸ்ரீலஸ்ரீ குரு மகா சந்நிதானம் தம்பிரான் கூட்டத்தவர் புடைசூழ எதிர்கொண்டு அழைத்து வருவார்கள். நந்திமண்டபத்தில் திருமடத்து ஓதுவாமூர்த்திகள் குழுவாக இணைந்து இப்பதிகத்தினை மெய்யுருகிப் பாடிட, சுற்றித் திரண்டிருக்கும் அன்பர் கூட்டமும் உடன் தொடர்ந்து ஓதிடும் நிகழ்வு சிறப்புமிக்கது. பதிகம் ஓதி முடிவடையுங்கால் கருவறையிலிருந்து புறப்படும் பூதகணத்தின் கைகளில் தாங்கியிருக்கும் காசுமுடிப்பினை பலிபீடத்தில் வைத்தீடும் ஐதிகமும், தொடர்ந்து மஹாதீபாராதனையும் நிகழ்த்தப்பெறும்.
இடரினும், தளரினும், நோய்கள் தொடரினும், வாழினும், சாவினும், வருந்திடினும், அருந்துயர் தோன்றிடினும், பேரிடர் பெருகிடினும், பிணிவரினும், உண்ணினும், பசிப்பினும், உறங்கிடினும்… இப்படி எவ்விதத்தில் வினைகள் வந்து நலிவுற்றாலும் பெருமானின் திருவடிகளையே இடைவிடாது தம் மனம் அரற்றிடும் என்பதனை சம்மந்தர் பாடியுள்ளார்.
பொருள் வளம் இடர்ப்பாடு நேரிடுங் காலத்தில் ‘இடரினும் தளரினும்’ எனும் இப்பதிகத்தினை மெய்நிறைத்து ஓதுபவர்கள் வறுமையகன்றி நலம்பெறுவது இன்றளவும் கண்கூடு. மேலும் கோமுக்தீஸ்வரர் திருவருளால் பிறவிவினைகள் எல்லாம் கழியப்பெற்று மறுமைப் பயனையும் அடைந்து இன்புறுகிறார்கள்.

இத்தலத்தில் திருமூலர் யோகநிலையில் அமர்ந்து அருளிச் செய்த திருமந்திரப் பாடல்கள் மறைந்திருந்ததும் இப்பீடத்தின் அடியில்தான்.
திருஞானசம்பந்தப் பெருமான் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது இப்பீடத்திற்கு அடியில் தமிழ் மணம் வீசுவதை அறிந்து, ‘திருமந்திரச் சுவடிகள்’ வெளிப்படுமாறு அருளிச் செய்தார் என்பது தல வரலாறு. எனவே இத்தலத்து பலிபீடம் மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.