சேலம் மாவட்டம் ஓமலூரை சேந்த மாணவர் கோகுல்ராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டார். சுவாதி என்ற பெண்ணை அவர் காதலித்ததால் கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து யுவராஜ், அருண், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களுகmகு சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இத்தீர்ப்புக்கு எதிராக யுவராஜ் உள்ளிட்டோர் தங்களது தண்டனையை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர்.
அவர்களின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்தனர். கடந்த 25ஆம் தேதி நீதிபதிகள் முன்பு ஆஜரான பிரதான சாட்சியான சுவாதி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் பிறழ் சாட்சியாக அறிவிக்கப்பட்டார். மேலும் ஒரு வாய்ப்பு தருகிறோம் நவம்பர் 30ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி சுவாதி இன்று மீண்டும் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதும் சுவாதி முன் கூறியதையே கூறி தன் நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை. இதனால் அதிருப்தியான நீதிபதிகள், “”சுவாதி உண்மையை சொல்லாமல் மறுத்துவிட்டார். சிசிடிவி உள்ள பெண் அவராக இருந்தும் அதனை ஏற்காமல் சுவாதி மறுத்துவிட்டார். சுவாதி யாராலும் அழுத்தத்திற்கு ஆளாகி யாரையோ காப்பாற்ற இவ்வாறு கூறுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
சாட்சிகள் உண்மையை சொல்ல வேண்டும் என்பதற்காகவே சத்தியப்பிரமாணம் பெறப்படுகிறது. சுவாதியின் சாட்சி இந்த வழக்கில் முக்கியம். அவரை சந்தித்ததாலேயே கோகுல்ராஜ் கொல்லப்பட்டார். சத்தியப் பிரமாணம் செய்த பின் தவறான தகவல் அளிப்பவரை எளிதாக கடந்து சென்று விட முடியாது. நீதித்துறையை மாசுபடாமல் இருக்க தவறான தகவலை தருவோர் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம். சுவாதி பொய் சொல்லியதற்கான அத்தனை முகாந்திரமும் இருக்கிறது. எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உத்தரவிட்டனர். மேலும் சுவாதி உண்மையை கூற இரண்டு வாரம் அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.