ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்தவர் ஷாலு தேவி (32). இவர் கடந்த 5-ம் தேதி, தனது அண்ணனுடன் பக்கத்து ஊரில் உள்ள கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
அப்போது, அவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், ஷாலு தேவியும், அவரது அண்ணனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், விபத்தாக கருதி வழக்கை முடித்து வைத்தனர்.
இந்நிலையில், மனைவியின் உடல் ஒப்படைக்கப்பட்டதும் அதைப் பார்த்து அவரது கணவர் மகேஷ் சந்திரா கதறி துடித்திருக்கிறார். பின்னர் சிறிது நேரத்திலேயே அவர் மாயமானார். இதையடுத்து அவரை போலீசார் கண்காணித்த போது, அவர் இன்சூரன்ஸ் அலுவலகத்துக்கு சென்றது தெரியவந்தது.
மனைவி இறந்த ஒரு மணி நேரத்திற்குள் அவர் இன்சூரன்ஸ் அலுவலகத்துக்கு சென்றதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் றேபட்டது. இதன் தொடர்ச்சியாக, மகேஷ் சந்திராவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அவரிடமிருந்து எந்த உண்மையும் வெளியாகவில்லை. மேலும், அவரது செல்போனையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதிலும் எந்த தகவலும் கண்டறியப்படவில்லை.
பின்னர், மகேஷ் சந்திரா வீட்டு வாசலில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, சம்பவம் நடந்த அன்று அவரது மனைவி ஷாலு தேவி இருசக்கரவாகனத்தில் புறப்பட்டதும் மகேஷ் சந்திரா உடனடியாக வெளியே ஓடிச் சென்று அங்கு நின்றிருந்த ஒரு காருக்குள் இருந்தவரிடம் ஏதோ சொல்கிறார். பின்னர் அந்த காரும் புறப்பட்டுச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார், மகேஷ் சந்திராவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, இன்சூரன்ஸ் பணத்துக்காக தனது மனைவியை திட்டம் போட்டு கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “ஷாலுவுக்கும் எனக்கும் 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணத்தின் போது என் மனைவியின் பெற்றோர் தருவதாகக் கூறிய வரதட்சணையை கொடுக்கவில்லை.
இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால், ஒருகட்டத்தில் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். ஆனால், அப்படி கொலை செய்தால் எனக்கு எந்த லாபமும் இல்லை என்பதை உணர்ந்தேன். எனவே, என் மனைவி பெயரில் 2 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்துக் கொடுத்தேன். இன்சூரன்ஸ் எடுத்து ஒரு வருடம் ஆன பிறகுதான், சம்பந்தப்பட்டவர் உயிரிழந்ததற்கு பிறகு அந்த மொத்த தொகையும் கிடைக்கும். எனவே, ஒரு வருடமாக அவரிடம் அன்பாக இருப்பதை போல நடித்து வந்தேன்.
இந்நிலையில், கடந்த மாதத்துடன் இன்சூரன்ஸ் போட்டு ஒரு வருடம் ஆகிவிட்டதால், அவரை கொலை செய்ய கூலிப்படையை அமர்த்தினேன். பிறகு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அவரை கோவிலுக்குச் செல்ல வைத்தேன். பின்னர் கூலிப்படையினர் காரை ஏற்றி அவரை கொலை செய்தனர். டிவியில் இன்சூரன்ஸ் விளம்பரத்தைப் பார்த்து இந்த யோசனை வந்தது” என்று கூறினார். இதனைத் தொடர்ந்து போலீசார், மகேஷ் சந்திராவையும், கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரையும் கைது செய்தனர்.