ஜி-20 தலைமை இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

“ஜி – 20 நாடுகளின் தலைமையை ஏற்றிருப்பதன் மூலம், இந்தியாவின் தகவல்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள முடியும்,” என, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.

உலகில் பொருளாதார ரீதியாக சக்தி வாய்ந்த 20 நாடுகளில் கூட்டமைப்பான ஜி – 20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா இன்று முறைப்படி ஏற்றது. இதனை முன்னிட்டு பல்கலைக்கழகங்கள் அளவிலான கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் உள்ள 75 பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியவதாவது:

ஜி – 20 நாடுகளின் தலைமையை ஏற்றிருப்பது இந்தியாவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு. இதன் மூலம், இந்தியாவின் தகவல்களை மற்ற நாடுகளோடு பகிர்ந்து கொள்ள முடியும். உலகில் தெற்கின் குரலாக நாம் மாறுவதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. முக்கியமான இந்த தருணத்தில் இந்த வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது.

குறிப்பாக தங்களின் சிறப்பான செயல்பாடுகளின் மூலம், இங்கு மாற்றத்தை நிழ்த்தியவர்கள் குறித்த தகவல்களை நாம் பகிர முடியும். உலகம் சவாலான கால கட்டத்தில் இருக்கும் போது,

நாம் இந்த வாய்ப்பை பெற்றுள்ளோம். அந்த வகையில் இது நமக்கும் ஒரு சவால் தான்.

ஜி – 20 தலைமையை ஏற்றிருப்பது மிக பெரிய வாய்ப்பு. வரும் ஓராண்டில் 200 ஜி – 20 கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்தக் கூட்டங்கள் டெல்லியை மையப்படுத்தியதாக இருக்காது. நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளையும் வெளிப்படுத்துவதாக இருக்கும்.

கொரோனா தொற்றால் உலகம் பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், இதனால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை மட்டும் பேசுவதாக இல்லாமல், பிரச்சனைகளை முன்வைப்பதாக அமையும். செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்த கூடிய உலகில், 2030 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய பொருளாதாரத்திற்கு இந்தியாவின் மனித வளம் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.

கடந்து போகும் ஒவ்வொரு நாளிலும், இந்தியாவின் மதிப்பை உலகம் பார்த்து கொண்டிருக்கிறது. இது 45 ஆண்டுகளுக்கு முன் இல்லாத நிலை. பிறருடன் நெருங்கி உறவு அதிகாரிப்பதற்கான எடுத்துக்காட்டாக இந்தியா விளங்குகிறது.

இவ்வாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.