வேலூர் மாவட்டத்தை அடுத்த பொன்னை அருகே கொண்டாரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிவகுமார். இவரது ஐந்து ஏக்கர் விவசாய நிலத்திற்கு வேளாண்துறை மூலம் பயிர் காப்பீடு செய்துள்ளார். இந்த காப்பீட்டுக்காக நான்காயிரம் ரூபாய் கட்டணமும் செலுத்தியுள்ளார். கடந்த மாதம் பெய்த கன மழையில் அவரது நிலத்தில் விளைந்திருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது.
இதனைத் தொடர்ந்து வேளாண்துறை அதிகாரிகள் மூலம் காப்பீட்டு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட இழப்பீடு வழங்கும்படி மனு அளித்துள்ளார். ஆனால் காப்பீட்டு நிறுவனம் பயிருக்கான இழப்பீட்டை வழங்கவில்லை. இதனால் விரத்தியின் உச்சிக்கு சென்ற சிவகுமார், சில விவசாயிகளுடன் சேர்ந்து நெல் பயிரிட்டிருந்த ஐந்து ஏக்கர் நிலத்திற்கு தீ வைத்துள்ளார்.
இதில் சிவக்குமார் பயிரிட்டு இருந்த அரை ஏக்கர் நெற்பயிர்கள் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த பொன்னை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். வேளாண் துறை அதிகாரிகள் மூலம் பயிர் காப்பீட்டு நிறுவனத்திடம் பேசி இழப்பீடு தொகை வாங்கித் தர தக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகள் சமாதானமாகி கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பொன்னை பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. விவசாயிகள் நெற்பயிருக்கு காப்பீடு பெற்றும் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காதது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.