குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிற நிலையில், முதல்கட்ட தேர்தல் நேற்று (1-12-22) காலை 8 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிக்கு நிறைவுப்பெற்றது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று (1-12-22) நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் குஜராத்தின் ‘மினி ஆப்ரிக்க’ கிராமமான ஜாம்பூரில் முதன்முறையாக நேற்று பழங்குடி மக்களுக்காக வாக்கு சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஜாம்பூரில் பழங்குடி மக்களுக்காக முதன்முறையாக வாக்கு சாவடி அமைத்திருப்பது அம்மக்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அந்த கிராமத்தின் மூத்தவரான ரஹ்மான் என்பவர் கூறுகையில், “எங்களுக்காக முதன்முறையாக தேர்தல் ஆணையமானது வாக்குச்சாவடி அமைத்து, நாங்களும் வாக்குச் செலுத்த வழிவகைச் செய்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் பல வருடங்களாக இங்கு வசிக்கிறோம்.

ஆனால் எங்களுக்காக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு , நாங்கள் வாக்குகள் செலுத்துவது இதுவே முதல்முறையாகும் “, என்று மனம் நெகிழ்ந்த அவர் ஜாம்பூரில் எப்படி இந்த ‘மினி ஆப்ரிக்க’ கிராமம் தோன்றியது என்ற வரலாறையும் பகிர்ந்துள்ளார்.
“எங்கள் மூதாதையர்கள் பல வருடங்களுக்கு முன்பு ஆப்ரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள். ஜுனாகத்தில் கோட்டை ஒன்று கட்டப்பட்டப் போது எங்கள் மூதாதையர்கள் இங்கு வந்தனர். அதோடு அந்த பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர் . முதலில் நாங்கள் ரத்தன்பூர் கிராமத்தில் தான் வசித்தோம். பின் ஜான்பூர் கிராமத்திற்கு வந்தோம். எங்களுக்கு சித்தி பழங்குடியினர் என்ற அங்கீகாரமும் கிடைத்தது. நாங்கள் ஆப்ரிக்க வழித்தோன்றல்கள் என்றாலும், இந்தியாவின் குஜராத்தி கலாசாரத்தைப் பின்பற்றுகிறோம்”, என்றார் ரஹ்மான்.
மேலும் இதுகுறித்து சுயட்சை வேட்பாளராக போட்டியிட்ட தலாலாவைச் சேர்ந்த அப்துல் மகுஜ் பாய் கூறுகையில், ” இந்த கிராமம் இரு ஆறுகளின் நடுவே அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் அனைவரும் ஒன்றாக கூடி வாழ்கின்றனர். நான் தேர்தல் வேட்பாளராக நிற்பது இது மூன்றாவது முறை. நாங்கள் சட்டமன்றத்திற்குள் செல்ல வேண்டும். அப்போது தான் இன்னும் அதிகமான பணிகள் செய்ய உரிமை கிடைக்கும். எங்களை இந்தியாவின் ‘மினி ஆப்ரிக்கர்’ என்பர். நாங்கள் சித்தி பழங்குடியினர். அரசு பழங்குடியினருக்கு உதவுகிறது. எனினும் எங்கள் உள்ளூரில் வசிக்கும் பழங்குடியினர் எந்த வித அத்தியாவசிய வசதிகளும் இன்றி அல்லல் படுகின்றனர்.

நாங்கள் எங்கள் பிரச்னைகளைக் குறித்து அரசுக்கு மனுக்கள் எமுதினோம். ஆனாலும், பழங்குடி மக்களைப் பொறுத்தமட்டில் அவரவர் சொந்த வழியில் செல்கின்றனர். நாங்கள் அரசை விமர்சிக்கிறோம் என்றாலும் அதற்கான காரணம் கண்டிப்பாக இருக்கும். விவசாயம் தான் எங்களின் பிரதான தொழில். அதுதவிர எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஜஸ் சித்தி பழங்குடியினர் நடனத்திலும் தேர்ந்தவர்கள். சுற்றுலாப் பயணிகள் அதிகம் குமிழும் இடங்களில் ஊதியம் ஈட்டும் வகையில் இந்த பழங்குடியின நடனத்தை ஆங்காங்கே நடத்துவர்”, என்றார்.