இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு மற்றும் குஷ்பூ உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பிரபல தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். அடுத்தாண்டு பொங்கல் விருந்தாக படம் வெளியாக இருக்கிறது.
இதற்கான புரமோஷன் பணிகளில் வாரிசு படக்குழு இறங்கியுள்ளது. ஏற்கனவே விஜய் குரலில் வெளியான ரஞ்சிதமே பாடல் மெஹா ஹிட் அடித்துள்ள நிலையில், அடுத்த சிங்கிள் எப்போது வெளியாகும் என்ற தகவலை வாரிசு படக்குழு அறிவித்துள்ளது. தீ தளபதி’ என்ற இரண்டாவது சிங்கிள், டிசம்பர் 4 ஆம் தேதி, சரியாக 4 மணிக்கு வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். தீ தளபதி சிங்கிள் போஸ்டரில், செஸ் காயினில் உள்ள ராஜாவின் உருவ பிரதிபலிப்பும், அதை சுற்றி அக்னி ஜுவாலைகள் கொழுந்து விட்டு எறிவது போல் உள்ளது.
இதை பார்த்து ரசிகர்கள் தளபதியின் அடுத்த சிங்கிள் தீயாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரஞ்சிதமே பாடல் இதுவரை 75 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. யூடியூப்பில் இது ஒரு சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. இசையமைப்பாளர் தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.