ஆள் கடத்தல் வழக்கு; போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த சென்னை திமுக பெண் கவுன்சிலர் கைது! – நடந்தது என்ன?

சென்னை சோழிங்கநல்லூர், காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அமர்ராம். அந்தப் பகுதியில் சொந்தமாக அடகுக்கடை நடத்திவருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு மயிலாப்பூரைச் சேர்ந்த தி.மு.க வட்டச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் நாவலூரிலுள்ள 58 சென்ட் நிலத்தை ரூ.60 லட்சம் முன்பணம் கொடுத்து பத்திரப்பதிவு செய்திருக்கிறார். அதற்கு அடுத்த வருடமே நிலத்துக்கான முழு தொகையையும் கொடுத்திருக்கிறார்.

அமர்ராம்

இந்த நிலையில், நிலப் பிரச்னை தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் அமர்ராம் சென்னை மெரினா காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார்.

அதில், “வழக்கறிஞர் செந்தமிழ் நிலப் பிரச்சனை குறித்துப் பேச மெரினா கடற்கரைக்கு என்னை அழைத்திருந்தார். மெரினா கடற்கரையில் உள்ள லைட் ஹவுஸ் அருகில் வந்த என்னை அடையாளம் தெரியாத நான்கு பேர் கண்ணைக் கட்டி ஒரு காரில் கடத்தி சென்றனர். அந்த கார், திருப்போரூர் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றது. அங்கு எனக்கு நிலத்தை விற்பனை செய்த கிருஷ்ணமூர்த்தி நின்றுகொண்டிருந்தார்.

மெரினா காவல் நிலையம் – ஆள் கடத்தல்

அவருடன், அவர் மனைவி விமலா (124-வது வார்டு தி.மு.க கவுன்சிலர்) உள்ளிட்ட 10 பேர் என்னை மிரட்டி அடித்து கத்தியால் கீரி அவர்களிடமிருந்து வாங்கிய 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 60 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் ரத்து செய்வதாகக் கையெழுத்து வாங்கிக்கொண்டு என்னை காரிலிருந்து தள்ளிவிட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி நாவலூரில் உள்ள நிலத்தை அமர்ராமிடமிருந்து 10 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு விற்பனை செய்ததும், அந்த நிலத்தின் இன்றைய மதிப்பு 25 கோடி என்பதும் தெரியவந்தது. மேலும், அந்த நிலத்தை கிருஷ்ணமூர்த்தி, அவரின் சகோதரர் மனோகரன் இருவரும் விற்பனை செய்யத் திட்டம் போட்டிருக்கிறார்கள். நில பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், கிருஷ்ணமூர்த்தி அடியாட்களைக் கொண்டு மிரட்டி அமர்ராமிடமிருந்து கையெழுத்து பெற்றது தெரியவந்தது.

வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் விமலா

கையெழுத்துப் போடவில்லை என்றால் குடும்பத்தைக் கொலைசெய்துவிடுவோம் என்று அடியாட்களைக் கொண்டு மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் கடத்தப்பட்டதற்கான சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணையைத் தீவிரப்படுத்தியது போலீஸ். இதனைத் தொடர்ந்து, 121 வார்டு தி.மு.க கவுன்சிலர் விமலா, அவர் கணவர் திமுக வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பத்து பேர் மீது ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறிக்கக் காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், சிறை பிடித்து சொத்துகளை அபகரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது.

தொழிலதிபர் கடத்தல் வழக்கு தொடர்பாக திமுக வட்டச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, 121 வார்டு திமுக கவுன்சிலர் விமலா ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில், இன்று (02.12.2022) இருவரும் தங்களுக்கு முன்ஜாமீன் கிடைத்துவிட்டதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தனர். அந்த ஆவணங்களைச் மாஜிஸ்திரேட் சரிபார்தப்போது அவை அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

இதனைத் தொடர்ந்து போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகக் கூறி, மாஜிஸ்திரேட் உத்தரவின்படி எழும்பூர் போலீஸார் இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள். ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.