இப்படி இருந்தால் இந்துக்களால் எப்படி குழந்தை பெற முடியும்? – இஸ்லாமிய தலைவரின் சர்ச்சை கருத்து

அசாம் மக்களவை உறுப்பினரான பத்ருதீன் அஜ்மல் என்பவர் இந்து மதத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் ஊடகத்திடம் பேசிய வீடியோ ஒன்றில்,”இஸ்லாமியர்களின் மக்கள்தொகை உயர்வதை போன்று, இந்துகளுக்கும் மக்கள்தொகை உயர வேண்டும் என்றால், இஸ்லாமியர்கள் போன்று தங்களது மகள்களுக்கு 18-20 வயதிலேயே மணமுடித்துவிடுங்கள். 

இஸ்லாமியர்களின் மக்கள்தொகை உயரும் வேகத்திற்கு இந்துகளின் மக்கள்தொகை உயராதது, அவர்களுக்கு பெரும் பிரச்னையாகவே இருக்கிறது. இந்துகள் சரியான வயதில் திருமணம் செய்ய மாட்டார்கள். அவர்கள் 2-3 பேருடன் உறவில் இருப்பார்கள், ஆனால் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். ஏறத்தாழ குடும்ப அழுத்தத்தின் காரணமாக 40 வயதில்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். இப்படி இருந்தால் அவர்களால் எப்படி குழந்தை பெற்றுக்கொள்ள இயலும்?, சொல்லுங்கள்.

நம் இஸ்லாமிய சமூகத்தில், பெண்கள் 18 வயதை அடைந்தவுடன் விரைவாக அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்திய அரசு இதனை அனுமதிக்கிறது. இளைஞர்களுக்கு 22 வயதில் திருமணம். எனவேதான், நமது மக்கள்தொகை அதிவேகமாக உயர்கிறது. 

இதனால், இந்துகளுக்கும் இஸ்லாமியர்களின் வழியை பின்பற்றி, 18 வயதில் அவர்களின் மகளுக்கு திருமணம் முடித்துவைக்க வேண்டும். தரிசு நிலத்தில் சாகுபடி செய்ய இயலாது, அதற்கு விளை நிலம்தான் வேண்டும்” என தெரிவித்தார். 

பத்ருதீனின் கருத்துக்கு பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அசாம் மாநிலத்தின் ஆளும் கட்சியான பாஜக கண்டனம் தெரிவித்து, கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. 

இதுகுறித்து, அசாம் பாஜக எம்எல்ஏ கலிதா என்பவர் கூறுகையில்,”இப்படி ஒரு கருத்தை கூறி, உங்கள் தாய் மற்றும் சகோதரி மீது அபாண்டமாக குற்றஞ்சாட்டுகிறீர்கள். உங்களை கண்டிப்பது மட்டுமில்லாமல் எச்சரிக்கவும் செய்கிறேன், இதுபோன்று இனி நடந்துகொள்ளாதீர்கள். இதை நீங்கள் தொடர வேண்டும் என்றால் வங்கதேசம் சென்று, அங்கு போய் செய்துகொள்ளுங்கள். இந்துகள் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கீழ்தரமான அரசியலுக்காக உங்களின் தாய் மற்றும் சகோதரியின் மானத்தை விற்று, அவர்களின் கண்ணியத்தை சீர்குலைக்க வேண்டாம். 

நீங்கள் இஸ்லாமியர், நாங்கள் இந்துக்கள். நாங்கள் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டுமா?. இது, ராமர் மற்றும் சீதையின் நாடு. இங்கு வங்கதேசத்தினருக்கு இடம் கிடையாது. நாங்கள் இஸ்லாமியர்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள மாட்டோம்” என்றார். பத்ருதீன் அஜ்மலின் கருத்து தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.