தனியாக வசித்த முதிய தம்பதி கழுத்தை அறுத்து கொலை
சித்ரதுர்கா : வீட்டில் தனியாக இருந்த முதிய தம்பதியின் கழுத்தை அறுத்து மர்ம நபர்கள் கொலை செய்தனர்.
சித்ரதுர்கா, ஹொசதுர்காவில் உள்ள விநாயகா காலனியை சேர்ந்தவர்கள் பிரபாகர் ஷெட்ரு, 75; விஜயலட்சுமி, 65 தம்பதி.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகள் தாவணகரேயிலும், மற்றொருவர் சிக்கநாயகனஹள்ளிலும் கணவருடன் வசிக்கின்றனர்.
இந்நிலையில்,
நேற்று காலை முதிய தம்பதி இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக
கிடந்தனர். வீட்டில் பீரோ, அலமாரி உடைக்கப்படவில்லை.
எனவே நகை,
பணத்துக்காக இந்த கொலை நடந்திருக்காது என கூறப்படுகிறது. கொலையான பிரபாகர்
ஷெட்ரு, ஹொசதுர்காவில் சமையல் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார். தொழில்
போட்டி காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சமீபகாலமாக
ஹொசதுர்கா நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பகலில்
வீடுகளை நோட்டமிடும் திருடர்கள், இரவில் பூட்டிய வீடுகளை உடைத்து
திருடுகின்றனர்.
‘இவர்கள் செயல்பாடுகளுக்கு யாராவது இடையூறு
செய்தால், தாங்களும் கொல்லப்படுவோம்’ என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.
எனவே, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என, போலீசாரிடம் வலியுறுத்தி
உள்ளனர்.
பெண்ணிடம் செயின் பறிப்பு போலீஸ் விசாரணை
திண்டிவனம் : திண்டிவனம் அருகே பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தன் மனைவி கோமதி, 27; இவரது சகோதரி கோடீஸ்வரி, 33; இருவரும் நேற்று பிற்பகல் 2:45 மணிக்கு வெள்ளிமேடுபேட்டையில் இருந்து திண்டிவனம் நோக்கி ஸ்கூட்டியில் சென்றனர். கோமதி ஸ்கூட்டியை ஓட்டிச் சென்றார்.
ஊரல் கிராமம் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு நபர்கள், கோமதி அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
ரோஷணை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், தப்பியோடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.
தனியாக இருந்தவரை தாக்கி 9 பவுன் திருடிய இரு பெண்கள்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், வீட்டில் தனியாக இருந்தவரை தாக்கி நகை திருடிய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே, எஸ்.ஆர்., லே – அவுட்டை சேர்ந்தவர் தேவராஜ், 58. கடந்த, 30ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, இரண்டு பெண்கள், வீடு வாடகைக்கு கேட்பது போல சென்றனர்.

வீட்டுக்குள் இருந்த அவரை தாக்கி, ஒன்பது பவுன் நகைகளை திருடிச் சென்றனர். இதுகுறித்து, தேவராஜ் கொடுத்த புகாரின் பேரில், மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மரப்பேட்டை அருகே போலீசார் ரோந்து சென்ற போது, சந்தேகப்படும்படி நின்ற இரண்டு பெண்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஆனைமலையை சேர்ந்த பவித்ராதேவி,26, விஜயலட்சுமி,24 என்பதும், தேவராஜை தாக்கி, ஒன்பது பவுன் நகை திருடிச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து, நகையை மீட்டனர்.
பூட்டியிருக்கும் வீடுகளை கண்காணித்து கொள்ளையடிக்கப்படுகிறது. அதேபோன்று, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம், நகை பாலீஸ் போட்டுகொடுப்பதாக கூறி, நகையை ‘அபேஸ்’ செய்கின்றனர். தற்போது, வீட்டில் வயதானவர்கள் தனியாக இருந்தால், முகவரி விசாரிப்பது, வீடு காலியாக இருக்கிறதா என, விசாரிப்பது போன்று, வீட்டினுள் புகுந்து நகை, பணத்தை சுருட்டும் சம்பவங்களும் அரங்கேறுகிறது.
இந்நிலையில், ‘வீட்டில் தனியாக இருப்பவர்கள் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் தொலைபேசி எண்கள் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறையின் எண் போன்றவற்றை தவறாது வைத்திருக்க வேண்டும்,’ என, கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரி நாராயணன் அறிவுறுத்தியுள்ளார்.
அப்பாவியை கைது செய்த வழக்கு 2 பெண் போலீசாருக்கு அபராதம்
மங்களூரு : ‘போக்சோ’ வழக்கில் உண்மையான குற்றவாளியை கைது செய்யாமல், அதே பெயர் கொண்ட அப்பாவியை கைது செய்து, ஓராண்டு வரை காவலில் வைத்திருந்த மகளிர் போலீஸ் அதிகாரிகள் இருவருக்கு, நீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
தட்சிண கன்னடா, மங்களூரு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். இது குறித்து, மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது.
பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்த போது, குற்றவாளியின் பெயர் நவீன் என மட்டும் கூறினார்.
விசாரணை நடத்திய போலீசார், உண்மையான குற்றவாளியை கைது செய்யாமல், நவீன் என்ற பெயர் கொண்ட அப்பாவி இளைஞரை கைது செய்து, அவர் மீது ‘போக்சோ’ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். ஓராண்டு நீதிமன்ற காவலில் வைத்திருந்தனர்.
சமீபத்தில் மங்களூரின் இரண்டாவது கூடுதல் எப்.டி.எஸ்.சி., போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
நீதிமன்ற விசாரணையில், குற்றவாளிக்கு பதிலாக அதே பெயர் கொண்ட நிரபராதியை கைது செய்தது தெரிந்தது.
போலீசாரின் செயலை வன்மையாக கண்டித்த நீதிமன்றம், நிரபராதியை கைது செய்த மங்களூரு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, எஸ்.ஐ., ரோசம்மா ஆகியோருக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
இந்த தொகையை பாதிக்கப்பட்ட நவீனுக்கு நிவாரணமாக வழங்கும்படியும், நீதிமன்றம் உத்தரவிட்டது.
‘இரண்டு மகளிர் போலீஸ் அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும், உள்துறைக்கு உத்தரவிட்டது.
3 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை
மாண்டியா: குடும்ப பிரச்னையால், மூன்று குழந்தைகளை கொலை செய்த தாய், தானும் தற்கொலை செய்து கொண்டார்.
மாண்டியா மத்துாரின், ஹொளேபீதி கிராமத்தில் வசிப்பவர் ஆகில் அகமது, 35. இவரது மனைவி உஸ்மா கவுசர், 30. தம்பதிக்கு ஹாரிஸ், 7, என்ற மகனும், ஆலிஜா, 4, அனம் பாத்திமா, 2, என்ற மகன்களும் உள்ளனர்.
கவுசர், தனியார் நர்சிங் ஹோமில் செவிலியராகவும், ஆகில் சென்னபட்டணாவில், கார் மெக்கானிக்காகவும் பணியாற்றினர்.
குடும்ப பிரச்னையால் தம்பதிக்குள் அவ்வப்போது சண்டை நடந்தது. இதனால் உஸ்மா கவுசர் வேலையை விட்டு விட்டார்.
குடும்பத்தின் பெரியவர்கள் சமாதானம் செய்தும், தம்பதி இடையே மனக்கசப்பு மறையவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, உஸ்மா தன் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார்.
பின் தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு உஸ்மாவின் தாய், வீட்டுக்கு வந்தபோது விஷயம் தெரிந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்