சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் தமிழ்வேந்தன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் பிரேம்ஜி மீது புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் “தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. 18 வயதிற்கு கீழ் உள்ள சிறார்களும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் மூழ்கி உள்ளனர்.
தமிழகத்தில் பலர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களாக மாறியுள்ளனர். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை திரைத்துறை பிரபலங்கள் வாயிலாக விளம்பரம் செய்வது வெட்கக்கேடானது. ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரங்களில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என நடிகர்கள் சொல்லும்போது அதை பொதுமக்கள் உண்மையான நம்பி விடுகின்றனர்.
விளம்பரங்களை நடிப்பது தனிப்பட்ட உரிமை என நடிகர்கள் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அவர்களுக்கும் சமூக பொறுப்புணர்வு உள்ளது. ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரத்தில் நடித்த சரத்குமார் முன்னாள் எம்எல்ஏவாகவும் ஒரு கட்சியின் நிறுவனராகவும் இருந்து வருகிறார். இவரை நடிகர் என்ற ஒரு குறுகிய வட்டத்தில் பார்க்க முடியாது. அதே போன்று நடிகர் பிரேம்ஜியும் ஆன்லைன் தம்பி விளம்பரத்தில் நடித்துள்ளார்.
எனவே நடிகர்கள் சரத்குமார் மற்றும் பிரேம்ஜி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதேபோன்று இவர்கள் அடித்த ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்” என புகார் மனு அளித்துள்ளார்.