ஈரோடு மாவட்டத்தை அடுத்த பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சிக்குட்பட்ட பாலக்கரை அரசு தொடக்கப் பள்ளியில் சுமார் 40 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இரண்டு கழிவுகளையும் பட்டியலினம் மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மாணவர்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் தலைமை ஆசிரியை கீதாராணி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதன் காரணமாக தலைமை ஆசிரியர் கீதாராணியை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதிசந்திரா பணியிடை நீக்கம் செய்தார். தலைமை ஆசிரியை கீதாராணி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் 301-ஆர், 310-ஜே, 75, 286 போன்ற நான்கு பிரிவுகளின் கீழ் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கூறுகையில் “பள்ளிகளுக்கு கழிவறை சுத்தம் செய்வதற்கான தனியாக நிதி வழங்கப்படுகிறது. கழிவறை சுத்தம் செய்யும் பணியில் எக்காரணம் கொண்டும் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது. மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்வது குறித்து கண்டறிந்தால் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனையும் மீறி ஆசிரியர்கள் மாணவர்களை ஈடுபடுத்தினால் கட்டாயம் நடவடிக்கை பாயும்” என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.