கொடைக்கானல்: கொடைக்கானல் மலர்க் கண்காட்சிக்காக கொல்கத்தாவில் இருந்து5 ஆயிரம் டேலியா பூச்செடி நாற்றுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கொடைக்கானலில் 2023 மேமாதம் நடக்கவுள்ள மலர்க் கண்காட்சிக்காக முதல் கட்டமாக பிரையன்ட் பூங்காவில் சால்வியா,பிங்க் அஸ்டர், டெல்பினியம், லில்லியம் போன்ற மலர்ச் செடிகளை நடவு செய்யும் பணி நடந்தது. ஒரு லட்சம் மலர்ச் செடிகளை கடந்த சில நாட்களாக நடவு செய்தனர்.
இந்நிலையில் 5 ஆயிரம் டேலியாபூச்செடி நாற்றுகள் கொல்கத்தாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. ‘‘10-க்கும் மேற்பட்ட வண்ணங்களில் பூக்கும் டேலியா செடிகள் பிரையன்ட் பூங்காவில் விரைவில் நடவு செய்யப்படும்’’ என்று கொடைக்கானல் தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் கூறினார்.
இதற்கிடையே, பிரையன்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒரு முறைமட்டுமே பூக்கும் ‘பேர்ட் ஆஃப் பாரடைஸ்’ செடியில் தற்போது பூக்கள்மலர்ந்துள்ளன. பறவை பறப்பதுபோன்ற தோற்றத்தில் காணப்படும் இப்பூக்களை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.