கரீம்கஞ்ச்: இந்துக்களும் முஸ்லிம்கள் போல் தங்கள் பிள்ளைகளுக்கு இளம்வயதிலேயே திருமணம் செய்துவைக்க வேண்டும்” என்று அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ரூதீன் அஜ்மல் யோசனை தெரிவித்துள்ளார்.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “இந்தியாவில் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவர வேண்டும். இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவை. இந்துக்களின் மக்கள்தொகை குறைந்து வருகிறது. முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது” என்று கூறியிருந்தார்.
இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த பத்ருதீன் அஜ்மல், “முஸ்லிம் ஆண்கள் 20 முதல் 22 வயதில் திருமணம் செய்துவிடுகின்றனர். முஸ்லிம் பெண்கள் 18 வயதில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் இந்துக்கள் திருமணத்துக்கு முன்னரே இரண்டு, மூன்று பெண்களுடன் வாழ்கின்றனர். குழந்தை பெற்றுக் கொள்வதில்லை. சுகங்களைப் பெற்றுக் கொண்டு பணத்தை சேமிக்கின்றனர். 40 வயதுக்கு மேல்தான் அவர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர்.
40 வயதுக்கு மேல் எப்படி குழந்தை பெற்றுக் கொள்வது எளிதாகும். நல்ல வளமான மண்ணில் விதைக்கப்படும் விதைகளே பலன் தரும் பயிறாகும். அதனால் இந்துக்களும் முஸ்லிம்களின் நடைமுறையைப் பின்பற்றி தங்கள் பிள்ளைகளுக்கு ஆண்களாக இருந்தால் 20 முதல் 22 வயதிலும் பெண்களாக இருந்தால் 18 முதல் 20 வயதிலும் திருமணம் செய்துவைக்க வேண்டும். அப்புறம் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்று பாருங்கள்” என்று கூறினார்.
முன்னதாக, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ், டெல்லியில் ஷ்ரித்தா வாக்கர் என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் லவ் ஜிகாத் இருப்பதாகக் கூறியிருந்தார். இந்தியாவுக்கு அப்தாப்புக்கள் வேண்டாம், கடவுள் ராமர் போன்ற நரேந்திர மோடி தான் வேண்டும் என்றும் கூறியிருந்தார். அது குறித்து கூறிய பத்ருதீன், “உங்களை யாரும் தடுக்கவில்லையே. நீங்களும் நான்கைந்து லவ் ஜிகாத் செய்யலாமே. நீங்கள் எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை தூக்கிச் செல்லுங்கள். நாங்கள் சண்டைகூட போட மாட்டோம். உங்கள் பலம் என்னதான் என்று பார்ப்போமே” என்று கூறியுள்ளார்.
வக்ஃபு வாரியம் நாடு முழுவதும் புதிதாக பெண்களுக்காகவே 10 கல்லூரிகளை கட்டவிருப்பதாக அறிவித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டிய பத்ருதீன், “அந்தக் கல்லூரிகளில் இந்து பெண்களுக்கும் தாராளமாக இடம் வழங்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.