சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தையொட்டி கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நிகழ்ச்சி நடந்தது. இதில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு மாணவர்களோடு உரையாடினர். மாணவர்களை சந்தித்த அவர்கள் மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.
பின்னர் மாற்று திறனாளி சிறுவர்களை, இளைஞர்கள் சிலர் பைக்கில் கூட்டிச் சென்று அவர்களை சந்தோஷப்படுத்தினர். அதனை உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இங்குள்ள மாற்றுத்திறனாளிகளிடம் உரையாடிய போது அவர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அவை முதலாமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். பொது இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்தவையாக இருப்பதற்கான வேலைகள் கண்டிப்பாக எடுக்கப்படும்.பேருந்துகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததாக உருவாக்குவது, மற்ற பல கோரிக்கைகள் குறித்து நானும் சட்டபேரவையில் பேசினேன்” என குறிப்பிட்டார்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டூர்புரத்திலுள்ள சிறப்பு குழந்தைகளுக்கான மாநகராட்சி பூங்காவில், மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி மகிழ்ந்தோம். மாற்றுத்திறனாளிகளின் உலகத்தை உணர்ந்து நடக்க இந்நாளில் உறுதியேற்போம். @Anbil_Mahesh pic.twitter.com/HcrDfuPe93
— Udhay (@Udhaystalin) December 3, 2022
அதனையடுத்து திராவிட மாடலை உருவாக்கியதே நாங்கள்தான் என்று எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அப்படியா நல்லா இருக்கே என்று சிரித்தபடியே கூறிவிட்டு சென்றுவிட்டார்.