புதுடெல்லி: காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 நாள் பயணமாக வாரணாசி வந்துள்ளார். அவர் நேற்று இங்குள்ள தமிழர் மடங்கள், கோயில்கள் மற்றும் பாரதியார் வாழ்ந்த வீட்டுக்கு சென்று வந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஒரு மாத நிகழ்ச்சியாக ‘காசி தமிழ்ச் சங்கமம்’ கடந்த நவம்பர் 17 முதல் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சரவையிலும் உயர் அதிகாரிகளாகவும் உள்ள தமிழர்கள் பலரும் வந்தவண்ணம் உள்ளனர். இந்த வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் இரவு வாரணாசி வந்தார். 2 நாள் பயணமாக வாரணாசி அந்த அவரை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் வரவேற்றார்.
இந்நிலையில் அமைச்சர் நிர்மலா வாரணாசியில் நேற்று முதல் நிகழ்ச்சியாக, தமிழர்களின் பல நூற்றாண்டுகள் பழமையான ஸ்ரீகுமாரசாமி மடத்திற்கு காலை 9 மணிக்குச் சென்றார். மடம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஸ்ரீகுமாரசாமி மடத்தால் கேதார் படித்துறையில் கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வரும் கேதாரீஸ்வரர் கோயிலுக்கும் சென்று அபிஷேகம் செய்தார்.
பிறகு அருகில் தமிழக பிராமணர்கள் வாழும் அனுமர் படித்துறை பகுதிக்குச் சென்றார். நுழைவுவாயிலில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் நிர்மலா மரியாதை செய்தார்.
அப்பகுதியின் கிளையாக உள்ள காமகோடீஸ்வர சங்கர மடத்திற்கும் சென்ற அமைச்சருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.
இதன் எதிர்ப்புறம் சிவமடம் என்ற பெயரில் அமைந்துள்ள பாரதியார் வாழ்ந்த வீட்டுக்கும் அமைச்சர் நிர்மலா சென்றார். இதனுள் அமைந்த சிவன் கோயிலில் தரிசனம் முடித்த அவர், பாரதியாரின் தங்கை மருமகன் பி.ஏ.கிருஷ்ணன் குடும்பத்தாருடன் கலந்துரையாடினார்.
அதே பகுதியில் உள்ள சக்ரலிங்கேஷ்வரர் முத்துசாமி தீட்சிதர் மடத்திற்கும் சென்றார் அமைச்சர் நிர்மலா. பிறகு, அனுமர் படித்துறை வழியாக புனித கங்கையில் படகு சவாரி செய்தார்.
மாலை 4 மணிக்கு வாரணாசியின் கதோலியா பகுதியிலுள்ள தமிழர்களின் விசாலாட்சி கோயிலுக்கு அமைச்சர் நிர்மலா சென்று தரிசனம் செய்தார். இக்கோயிலை நிர்வகிக்கும் காரைக்குடியின் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்திற்கும் சென்றார். விஸ்வநாதருக்கு சிங்கார ஆரத்திக்கான நேற்றைய ஊர்வலத்தில் அமைச்சர் நிர்மலாவும் சுமார் 20 நிமிடம் நடந்து சென்றார்.
இதன் முடிவில், இரவு சுமார் 8 மணிக்கு தொடங்கி சுமார் ஒருமணி நேரம் காசி விஸ்வநாதர் கோயிலில் சிங்கார ஆரத்தி வழக்கம்போல் நடைபெற்றது.
தென்காசியின் காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து ஐந்து மூத்த கலைஞர்கள் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். இவர்களில் ஒருவரான முத்து எனும் நாகசுர கலைஞருக்காக அமைச்சர் நிர்மலா நேற்று 15 நிமிடங்கள் காத்திருந்தார். குமாரசாமி மடத்துக்கு பின் கேதாரீஸ்வரர் கோயிலுக்கு சென்ற நிர்மலா சீதாராமன், அங்கு நாகசுரக் கலைஞர் முத்து இல்லை என்பதால் பூஜையை நிறுத்தச் சொல்லி இருந்தார். பிறகு கலைஞர் முத்து வந்த பிறகு அவரது நாகசுர வாசிப்புடன் பூஜையை முடித்தார்.