காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 58.68% வாக்குகள் பதிவாகின.
குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்றது. தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பகுதிகளை உள்ளடக்கிய, 19 மாவட்டங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், 56.88% வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில், பழங்குடியினருக்கு 14, தலித்களுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களில் 70 பேர் பெண்கள். 339 பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.
திங்கள்கிழமை மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அகமதாபாத், காந்திநகர், மேஷானா, பதான், பானாஸ்கந்தா, சபர்கந்தா, ஆரவல்லி, மஹீஸ்நகர், பஞ்சமஹால், தாஹோத், ஆனந்த், கேதா, சோட்டா உதய்பூர் உள்பட 14 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த தேர்தலில் மாலை 5 மணி வரை தோராயமாக 58.68% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இன்றைய தேர்தலில் 833 வேட்பாளர்கள் களம் கண்டனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி, குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜகதீஷ் தக்கோர், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
மும்முனைப் போட்டி: குஜராத்தில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வரும் பாஜக, 7-வது முறையும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களில் பாஜக, காங்கிரஸுக்கு இடையே இருமுனைப் போட்டி நிலவியது. இம்முறை அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் தீவிரமாகக் களமிறங்கி உள்ளதால், மும்முனைப் போட்டி ஏற்பட்டது.
தேர்தல் முடிவு: வரும் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குஜராத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் அன்றைய தினமே வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.